பிக் பாஸ் சீசன் 8 - களமிறங்குகிறாரா மாஸ் நடிகர்?
8 புரட்டாசி 2024 ஞாயிறு 11:05 | பார்வைகள் : 1017
தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏழு சீசன்களாக புகழ் பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். சின்னத்திரை வரலாற்றில் தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற வெகு சில நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. கடந்த ஏழு சீசங்களாக இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் இந்த முறை அவர் அமெரிக்காவில் சில தொழில் முறை பயிற்சிகளை மேற்கொள்ளவும், குறிப்பிட்ட சில கலைகள் குறித்து படிக்கவும் சென்றுள்ள நிலையில் அவரால் இந்த சீசனை தொகுத்து வழங்க முடியாமல் போனது.
இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த எட்டாவது சீசனை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். ஏற்கனவே அதற்கான பணிகள் துவங்கியுள்ள நிலையில், அண்மையில் இந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் பிரமோஷன் வீடியோவிற்கான ஷூட்டிங்கும் நடந்து முடிந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள பிரபலங்கள் குறித்து அறிவிப்புகள் வெளிவரவில்லை என்றாலும் இணையத்தில் பல வகையான யுகங்கள் எழுந்து வருகின்றது. இந்நிலையில் குறிப்பிட்ட இரு பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதில் முதலாவதாக அண்மையில் சமையல் கலைஞராக அசத்தி வரும் மாதம்பட்டி ரங்கராஜ் விரைவில் இந்த நிகழ்ச்சியில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கூக் வித்து கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இப்போது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் ரங்கராஜ், ஏற்கனவே "மெஹந்தி சர்க்கஸ்" மற்றும் "பென்குயின்" ஆகிய இரு திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும், எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும், விநியோகஸ்தராகவும் அசத்தி வரும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கவிதை நடையிலேயே பிக் பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்சை புரட்டிப் போடப் போகிறார் பார்த்திபன் என்று இப்போதே இணையத்தில் மீம்ஸ்கள் வைரலாக தொடங்கியுள்ளது. தான் இயக்கிய முதல் திரைப்படத்திற்காகவே தேசிய விருது வென்ற வெகு சில இயக்குனர்களில் நடிகர் பார்த்திபனும் ஒருவர் ஆவார்.