பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம்.. 200,000 பேர் வரை பங்கேற்பு!!
5 மார்கழி 2024 வியாழன் 16:12 | பார்வைகள் : 2496
நவம்பர் 5, இன்று வியாழக்கிழமை நாட்டின் பல்வேறு நகரங்களில் பொதுப்பணித்துறையினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் மொத்தமாக 200,000 பேர் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதாக அறிய முடிகிறது.
பல்வேறு காரணங்களை தெரிவித்து, இன்றைய தினம் மூன்றில் ஒரு ஆசிரியர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இல் து பிரான்சுக்குள் கல்விச் செயற்பாடுகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டிருந்தன. 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் பல ஆயிரம் ஆசிரியர் பணிகள் நீக்கப்பட உள்ளதாகவும், ஊதிய உயர்வு இல்லை எனவும் குற்றம்சாட்டி, வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
வேலை நிறுத்தத்தோடு, Marseille , Bayonne , Guéret , Châteauroux , Nantes , Avignon , Besançon , Limoges , Pau மற்றும் Caen போன்ற நகரங்களில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றிருந்தன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பலதரப்பட்ட வாசகங்களை தாங்கிய பதாகைகளை தாங்கிக்கொண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் ஜனாதிபதி மக்ரோனை பதவி விலகுமாறும் எழுதியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.