Paristamil Navigation Paristamil advert login

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

7 தை 2012 சனி 05:56 | பார்வைகள் : 9179


மனிதனால் ஏறவே முடியாத அளவு உயரமான மலைகளும் உள்ளன. மனிதன் சர்வசாதாரணமாக ஏறித் திரியும் மலைகளும் உள்ளன. ஆனால் எல்லா மலைகளின் உயரத்தையும் துல்லியமாகத் தெரிவிக்கிறார்களே, அது எப்படி? பூமிப் பரப்பில் இருந்து மலையின் உச்சி வரை `டேப்’ வைத்து அளக்கிறார்களா என்ன? பூமியின் பரப்பைக் கணக்கிடுவதற்கு மிகப் பழைய முறைகள் உண்டு. அவை பலவகைப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட முறையை அதிகம் பயன்படுத்துகின்றனர். அம்முறைக்கு, `முக்கோணமாக்கல்’ என்று பெயர். கணக்கில் ஜியாமெட்ரி பாடங்கள் படிக்கும்போது முக்கோணத்தின் ஒரு பக்கத்தின் நீளம், கோணம் ஆகியவற்றைக் கொடுத்து மற்ற இரு பக்கங்களின் அளவுகளைக் கண்டுபிடிப்போமே அந்த முறைதான் பூமியின் பரப்பு பற்றிய கணக்கீடுகளுக்கும் பயன்படுகிறது.

 
ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள நிலமோ அல்லது ஆயிரம் ஏக்கர் நிலமோ, அளவிடும் முறை ஒன்றுதான். ஒரு சங்கிலி, கம்பி அல்லது கழி வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட பக்கத்தை அளந்துகொண்டு, அதை ஒரு முக்கோணத்தின் ஒரு பக்கமாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இருபக்க முக்கோணங்களையும் கணக்கிட வேண்டும். இவ்வாறு ஒரு முக்கோணத்தின் பரப்பு கணக்கிடப்பட்டதும், மொத்தப் பரப்பையும் பல முக்கோணங்களாக்கிக் கணக்கிட்டு விட முடியும். இவ்வாறு கோணங்களைக் கணக்கிட உதவும் கருவிக்கு `டிரான்சிட்’ என்று பெயர். இந்தக் கருவியை வைத்து செங்குத்தாகவும் கணக்கிட முடிவதால், மலை உச்சிகளின் உயரத்தையும் கணக்கிட முடிகிறது.
 
இதற்குச் சமப்பரப்பு (லெவலிங்) முறையில் கணக்கிட வேண்டும். அதாவது இந்த டிரான்சிட் கருவியில் சமப் பரப்பைக் குறியிட்டுக் காட்ட ஒரு ஸ்பிரிட் முனை உள்ளது. இந்தச் சமப் பரப்பைக் கணக்கிட்டு முதலில் முக்கோணத்தின் ஒரு பக்கமாக வைத்துக்கொள்வோம். பிறகு டிரான்சிட் கருவின் மூலம் நம் பார்வையை ஒரு கோணத்தில் வைத்துக்கொண்டு மலையுச்சியைப் பார்க்க வேண்டும். இப்போது கோணத்தையும் கணக்கிட்டுக்கொண்டால், ஏற்கனவே சொன்னபடி முக்கோண முறைக்கு வழி கிடைத்துவிடும். இவ்வாறு மலையின் உயரத்தைக் கணக்கிட்டு விடலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்