வெந்தய இட்லி
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9445
வெந்தய இட்லியானது மிகவும் அருமையான, அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான காலை உணவும் கூட. இது ஒரு கர்நாடக ரெசிபி. இதனை காலையில் உட்கொண்டால், அது உடலுக்கு வேண்டிய எனர்ஜியைக் கொடுத்து, நாள் முழுவதும் நன்கு செயல்பட உதவியாக இருக்கும். மேலும் எப்போதும் அரிசி இட்லியை செய்து சாப்பிட்டு போர் அடித்தவர்கள், இந்த வெந்தய இட்லியை முயற்சி செய்யுங்கள். சரி, இப்போது அந்த வெந்தய இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
தேங்காய் - 1 கப் (துருவியது)
வெந்தயம் - 1 டீஸ்பூன்
தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக தட்டியது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் போட்டு, குறைந்தது 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் மற்றொரு பௌலில் வெந்தயத்தைப் போட்டு தயிர் ஊற்றி, கரண்டி கொண்டு நன்கு கலந்து, இதையும் 6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
ஆறு மணிநேரம் ஊற வைத்தப் பின்னர் மிக்ஸியில் துருவிய தேங்காய் மற்றும் ஊற வைத்துள்ள வெந்தயக் கலவையை போட்டு நன்கு மென்மையாக அரைத்து, அதனை தனியாக ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்து ஊற வைத்துள்ள அரிசியை நன்கு அரைத்து, அதனை அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையில் சேர்த்து, நன்கு கலந்து, பின் வெல்லத்தை சேர்த்து நன்கு கரண்டி கொண்டு கலந்து, மாவை நொதிக்க விட வேண்டும்.
கலவையானது நன்கு பொங்கி வந்த பின்னர், அதில் உப்பு சேர்த்து நன்கு கலந்து, பின் இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுத்தால், சுவையான வெந்தய இட்லி ரெடி!!! இதனை தக்காளி மற்றும் வெங்காய சட்னியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.