Paristamil Navigation Paristamil advert login

பொடுகு ஏன் வருகிறது தெரியுமா..?

பொடுகு ஏன் வருகிறது தெரியுமா..?

21 பங்குனி 2024 வியாழன் 12:58 | பார்வைகள் : 915


News18 Tamilபலரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாக இருக்கிறது பொடுகு தொல்லை. இந்த பிரச்சனை காரணமாக பலரும் பொதுவெளியில் அவமானத்தை எதிர்கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. நம்மில் பலர் பொடுகு தொல்லையை குறைக்க அல்லது நம் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கடைகளில் விற்கப்படும் அழகுசாதன பொருட்களை பயன்படுத்துகிறோம்.

ஆனால், உங்களுக்கு தெரியுமா.! உண்மையில் உடலில் சில வைட்டமின்கள் பற்றாக்குறை ஏற்பட்டாலும் கூட பொடுகு தொல்லை உண்டாகும் என்று. என்னது வைட்டமின் குறைபாட்டால் பொடுகு வருமா என்று ஆச்சரியமாக இருக்கிறதா.! வைட்டமின்கள் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவ கூடியவை. இவை நம்முடைய சருமம், முடி மற்றும் பிற உறுப்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் கணிசமான பங்கை வகிக்கிறது.

மறுபுறம், பல ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளும் கூட சில நேரங்களில் பொடுகு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. பொடுகு பிரச்சனை எதனால் வருகிறது என அறிந்து கொள்வதற்கு முன், பொடுகு என்றால் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தலையில் உள்ள சருமத்தின் இறந்த மற்றும் வறண்ட செல்கள் உதிர்வதே பொடுகு ஆகும். இது Malassezia globasa என்ற பூஞ்சையால் உற்பத்தியாகிறது. ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், அவருக்கு இந்த பூஞ்சையின் தொற்று அதிகரித்து பொடுகு பிரச்சனைகளும் அதிகரிக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு, அதில் சில வைட்டமின் குறைபாடும் ஒன்று.

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்… உடலில் போதுமான அளவு ஃபோலிக் ஆசிட் அல்லது வைட்டமின் பி9 இல்லாதது உச்சந்தலை உலர்வதற்கும், கூந்தல் மெலிந்து உடையவும் ஒரு காரணம். தவிர உடலில் வைட்டமின் பி9 பற்றாக்குறை இருப்பது முடி உதிர்தல் அல்லது பொடுகு பிரச்சனைகள் ஏற்படவும் வழிவகுக்கும். இவை தவிர வைட்டமின்ஸ் B2, B3, B6 மற்றும் B7-ன் குறைபாடும் பொடுகு பிரச்சனை ஏற்பட காரணமாகிறது. வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் பற்றாக்குறை மட்டுமே பொடுகு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதல்ல. இவை தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் சி உள்ளிட்ட வைட்டமின்களின் குறைபாடும் கூட பொடுகு தொல்லை மற்றும் முடி உதிர்வு பிரச்சனையை ஏற்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள்.

வைட்டமின் ஏ குறைபாட்டை சரி செய்ய கேரட், பூசணிக்காய், கீரைகள் உள்ளிட்டவை மிகவும் நல்ல உணவுகள். மீன், இறைச்சி மற்றும் முழு தானியங்கள் பி வைட்டமின்களின் குறிப்பிடத்தக்க ஆதாரங்களாக இருக்கின்றன. பச்சை காய்கறிகள் சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரிகள், பப்பாளி உள்ளிட்டவை வைட்டமின் சி குறைபாட்டை சரி செய்ய மிகவும் பயனுள்ள உணவுகளாக இருக்கும். அதே நேரம் வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்ய பால், தயிர், முட்டை, கொழுப்பு நிறைந்த மீன், காட் லிவர் ஆயில், மஷ்ரூம்கள் உள்ளிட்ட உணவுகள் உதவியாக இருக்கும்.

நிபுணர்களின் கூற்றுப்படி பொடுகு தொல்லை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக வைட்டமின்கள் குறைபாடு இருக்கிறது. எனினும் வயது ஏற ஏற ஸ்கால்ப் ஆரோக்கியம் மற்றும் முடி வளர்ச்சி மோசமாகும். பொடுகு பிரச்சனை அசாதாரணமாக தொடர்ந்து அதிகரித்தால் உரிய நிபுணரை அணுக வேண்டும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்