Paristamil Navigation Paristamil advert login

நாடாளுமன்ற தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் கச்சத்தீவு விவகாரம்

நாடாளுமன்ற தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் கச்சத்தீவு விவகாரம்

1 சித்திரை 2024 திங்கள் 14:41 | பார்வைகள் : 3250


தமிழர்களின் மீன்பிடி உரிமைப் பகுதியான கச்சத்தீவை இலங்கைக்கு மத்திய அரசு தாரைவார்த்ததால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். கச்சத்தீவின் அருகே தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றால், அவர்களை சுட்டுக் கொல்வது, கைது செய்வது, சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது என இலங்கை கடற்படை அட்டூழியம் செய்கிறது. எனவே, மீனவர்களின் மீன்பிடி உரிமையை மீட்டெடுக்க கச்சத்தீவை மீட்பது ஒன்றே தீர்வு என தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

கச்சத்தீவு ஒப்பந்தம்


மத்தியில் காங்கிரசும், தமிழகத்தில் தி.மு.க.வும் ஆட்சியில் இருந்தபோது 1974-ம் ஆண்டு இந்திய அரசால் இலங்கைக்கு கச்சத்தீவு வழங்கப்பட்டது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள கடல் உரிமைகளையும், கடல் எல்லைகளையும் வரையறுத்துக் கொள்ளும் வகையில் கச்சத்தீவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

1974-ம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தில் இந்தியா, இலங்கை மீனவர்கள் மீன் பிடிக்கவும், புனித பயணத்திற்கும் அனுமதி இருந்தது. 1976-ம் ஆண்டு இரு நாடுகளின் அரசுகளுக்கும் இடையே ஏற்பட்ட மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாட்டு மீனவர்களும் மற்ற நாடுகளின் பொருளாதார மண்டலங்களில் மீன்பிடிக்க தடை விதிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் இருந்தது. இதன்மூலம் இந்திய மீனவர்களின் கச்சத்தீவு மீன்பிடி உரிமை பறிபோனது.

அரசியல் பிரச்சினை

தமிழக மீனவர்களின் பாதுகாப்பு என்று வரும்போது, கச்சத்தீவு விவகாரம் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே தொடர்ந்து அரசியல் பிரச்சினையாக உருவெடுத்தது. குறிப்பாக இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சினை மறைந்த முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இடையே எப்போதும் இருந்து வந்தது. மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவை மீட்பதாக ஜெயலலிதா சூளுரைத்தார். 

1990, 2000-களில் கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, கச்சத்தீவு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். அதன்பின்னர் அ.தி.மு.க. அரசு இந்த வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டது.

2016-ல் கச்சத்தீவு மீட்பு விவகாரம் தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடுமையான விவாதத்தை உருவாக்கியது. 2016-ம் ஆண்டு ஜூன் மாதம், அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியபோது, கச்சத்தீவை தாரைவார்ப்பதை தடுக்க கருணாநிதி எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். ஆனால், 1991-ம் ஆண்டு கச்சத்தீவை மீட்டுத் தருவதாக உறுதியளித்த ஜெயலலிதா, என்ன செய்து கொண்டிருந்தார்? என கருணாநிதி எதிர்கேள்வி எழுப்பினார்.

கருணாநிதி அறிக்கை

இதுதொடர்பாக விரிவான விளக்கங்களுடன் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறிய விவரம்:

கச்சத்தீவை விட்டுக்கொடுப்பதை நான் ஒருபோதும் ஏற்கவில்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை. அப்போது மாநில முதல்-அமைச்சர் என்ற முறையில் எனது எதிர்ப்பை தெரிவித்தேன்.

1992ல் தமிழக சட்டப் பேரவையில் ஜெயலலிதா பேசும்போது, "கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால் கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக் கூடிய, நடைபெறக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை" என்று கூறினாரா? இல்லையா? 

இன்னும் சொல்லப்போனால், தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போது பிரதமராக இருந்த நரசிம்ம ராவுக்கு எழுதிய கடிதத்தில்,  "தீவு நாடான இலங்கைக்கு, சிறிய தீவினை (கச்சத் தீவினை) இந்திய அரசு பிரித்துக் கொடுத்தது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலே நல்லுறவு நிலவிட வேண்டும் என்பதற்காகத்தான்" என்று தெரிவித்திருந்தார்.

மத்திய அரசுக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில், கச்சத் தீவையும், அதற்கு அருகில் உள்ள கடல் பகுதிகளையும் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், வலைகளைக் காய வைப்பதற்கும், யாத்திரை செல்வதற்கும் நிரந்தர குத்தகைக்கு பெறலாம் என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

இவ்வாறு கச்சத்தீவு விவகாரம் தொடர்ந்து தமிழக அரசியலின் ஒரு அங்கமாக இருந்தாலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. கையில் எடுத்திருப்பது பேசுபொருளாகி உள்ளது. 

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது தொடர்பான விவரங்களை பெற்றார். இந்த விவரத்தை காட்டி, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசையும், மாநிலத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க.வையும் பா.ஜ.க. தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. காங்கிரசும், தி.மு.க.வும் சேர்ந்து சதி வேலை செய்து கச்சத்தீவை தாரைவார்த்ததாக குற்றம்சாட்டுகிறது. இதற்கு காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தரப்பில் தொடர்ந்து பதிலடி கொடுக்கப்படுகிறது.

பிரதமர் மோடி:

தமிழக நலன் காக்க தி.மு.க. எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு குறித்து வெளிவரும் புதிய விவரங்கள் தி.மு.க.வின் இரட்டை வேடத்தை காட்டுகின்றன. காங்கிரசும், தி.மு.க.வும் குடும்ப கட்சிகள். அவர்கள் தங்கள் சொந்த மகன்கள் மற்றும் மகள்கள் உயர வேண்டும் என்று மட்டும்தான் கவலைப்படுகிறார்கள். வேறு யாரையும் பொருட்படுத்துவதில்லை. கச்சத்தீவு மீதான அவர்களின் அலட்சியப்போக்கு, மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மு.க.ஸ்டாலின்

10 ஆண்டுகளாக கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாக தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்? இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்? 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிறப்புத்திட்டம் என ஒன்றாவது உண்டா? திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்