விஜய் சீக்கிரமே சினிமாவுக்கு விடை கொடுக்க போகிறாரா..?
16 ஆடி 2024 செவ்வாய் 09:10 | பார்வைகள் : 786
நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழக வெற்றிக்கழகம் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்த அரசியல் கட்சியை, பதிவு செய்து தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தன்னுடைய அரசியல் பயணத்தை வேகப்படுத்த முடிவெடுத்துள்ளார். அதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன.
விஜயின் அரசியல் கட்சியை இளைஞர்கள் தாண்டி பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும், அவருடைய கொள்கை மற்றும் அரசியல் வருகைக்கான காரணம் உள்ளிட்ட விஷயங்களை மக்களிடம் விளக்க பல திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதில் கட்சி மாநாடு பல வகையில் நடத்த முடிவு எடுத்துள்ளனர். அதில் ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடுகள், 10 மாவட்ட பொதுக்கூட்டங்கள் என வகைப்படுத்தி நடத்தவுள்ளனர்.
மாநாடுகள் மட்டுமல்லாமல் மக்களை நேரடியாக சந்திக்க, தமிழகத்தில் சுமார் 100 சட்டமன்றத் தொகுதிகளில் விஜய் நடைபயணம் செய்யவும் முடிவெடுத்து இருக்கின்றார். இந்த 100 தொகுதிகள் தமிழகத்தில் உள்ள வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களை இணைக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
முதல் மாநாட்டை நடத்த சேலம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் நடத்த ஆலோசித்தனர். அதில் இறுதியாக திருச்சியை தேர்வு செய்திருப்பதாக நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. தமிழகத்தின் மையப் பகுதி திருச்சி என்பதால், சென்னையில் இருந்தும், கன்னியாகுமரி, வேலூர், கோவை, ஓசூர், நாகப்பட்டனம் என அனைத்து பகுதிகளில் இருந்தும் 6 முதல் 7 மணி நேரத்திற்குள் திருச்சியை சென்று அடைந்து விடலாம்.
எனவே, கட்சி தொண்டர்கள் மாநாட்டிற்கு வருவது எளிதாக இருக்கும் என்ற வகையிலும் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து இருப்பதாக தெரிகிறது. அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் எதுவும் பேசாமல் உள்ளார், அரசியல் நிகழ்ச்சியில் நடத்தி பேசவில்லை என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில்தான், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் நீட் குறித்து பேசி இருந்தார். அவருடைய பேச்சு பெரும் விவாதமானது. இந்த நிலையில் கட்சியின் கொடியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளனர்.
அதுவும் கட்சியின் பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதும், கட்சிக்கொடி அறிமுகம் செய்யப்படுகிறது. அதன் பின் மாநாட்டில் தன்னுடைய நிலைப்பாடுகள் குறித்து பல விஷயங்களை பேச இருக்கிறார் விஜய். சினிமாவில் இருந்து விலகும் விஜய், அரசியலில் அதிதீவிர கவனம் செலுத்த இந்த மாநாடு மற்றும் நடைபயணம் உள்ளிட்டவற்றை திட்டமிட்டு இருக்கிறார். அது அவருக்கு எந்த அளவுக்கு பலனை தரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.