Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் தீர்மானம்!

பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் தீர்மானம்!

1 ஆவணி 2024 வியாழன் 03:16 | பார்வைகள் : 573


ஜாதியே தெரியாதவர் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுவதா?' என, எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை மறைமுகமாக குறிப்பிட்டு, பா.ஜ., - எம்.பி., அனுராக் தாக்குர் பேசியதற்கு எதிராக, லோக்சபாவில் நேற்று காங்கிரஸ் உள்ளிட்ட 'இண்டியா' கூட்டணி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், அனுராக் தாக்குரின் உரையை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, உரிமை மீறல் தீர்மானத்தை காங்., கொண்டு வந்துள்ளது.


பார்லி.,யின் இரு சபைகளிலும், மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. காங்., மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் சமீபத்தில் பட்ஜெட் குறித்து பேசினார்.
அப்போது, மத்திய பா.ஜ., அரசை அவர் கடுமையாக விமர்சித்ததுடன், நாடு முழுதும் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலடி கொடுத்து, லோக்சபாவில் நேற்று முன்தினம் பேசிய மத்திய முன்னாள் அமைச்சரும், பா.ஜ., - எம்.பி.,யுமான அனுராக் தாக்குர், 'தன் ஜாதியே தெரியாதவர், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுகிறார்' என, ராகுலை மறைமுகமாக சாடினார்.


முழக்கம்


'என்னை நீங்கள் எவ்வளவு அவதுாறு செய்தாலும் பரவாயில்லை. நான் தொடர்ந்து போராடுவேன். உங்களிடம் நான் மன்னிப்பு கோரப் போவதில்லை' என, ராகுல் பதிலளித்தார்.

இந்த சம்பவம் நடந்த போது, சபையில் சபாநாயகர் ஓம் பிர்லா இல்லை. அவருக்கு பதில் சபையை, மூத்த எம்.பி., ஜெகதாம்பிகா பால் நடத்தினார்.

அனுராக் தாக்குர் பேச்சுக்கு, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, 'அனுராக் தாக்குரின் பேச்சு சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும்' என, ஜெகதாம்பிகா பால் உறுதி அளித்தார்.

அனுராக் தாக்குர் பேசிய வீடியோவை, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் பகிர்ந்த பிரதமர் மோடி, 'அனுராக் தாக்குரின் உறுதியான பேச்சை அனைவரும் தவறாமல் கேட்க வேண்டும்' என்றார்.

இந்நிலையில், நேற்று காலை லோக்சபா கூடியதும் கேள்வி நேரம் துவங்கியது. அப்போது, காங்., - எம்.பி.,க்கள் எழுந்து, 'ராகுல் மீது ஜாதி ரீதியாக விமர்சித்த அனுராக் தாக்குர் மன்னிப்பு கேட்க வேண்டும். இது குறித்து சபையில் பேசுவதற்கு, தங்களை அனுமதிக்க வேண்டும்' என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ''அந்த பிரச்னை முடிந்து விட்டது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுலே, தனக்கு மன்னிப்பு வேண்டாம் என கூறி விட்டார். எனவே, இந்த விவகாரத்தில் அமளியில் ஈடுபட வேண்டாம்,'' என்றார்.

ஆனால், இதை ஏற்காத காங்., மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள், சபையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது, சபாநாயகர் ஓம் பிர்லாவுடன், லோக்சபா காங்., துணைத் தலைவர் கவுரவ் கோகோய், மூத்த எம்.பி., மாணிக்கம் தாகூர் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை


தங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை என தெரிந்ததும், சபையின் மையப்பகுதிக்குள் இறங்கி, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, காங்., - எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.

அப்போது, பார்லி., விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், ''எப்போது பார்த்தாலும், ஜாதி ஜாதி என்றே காங்., பேசி வருகிறது. ஜாதியை விட்டால், அக்கட்சிக்கு வேறு எதுவும் தெரியாது போலிருக்கிறது. ஜாதி ரீதியாக நாட்டை பிளவுபடுத்தியதே காங்., தான்.

''நாள் முழுதும் ஜாதி பற்றி பேசுவராம்; அவர்களது ஜாதி என்ன என கேட்டால் மட்டும், அமளியில் ஈடுபடுவராம். என்ன நியாயம் இது?'' என, கடுமையாக விமர்சித்தார்.

இதனால், மேலும் அதிருப்தி அடைந்த மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்., - எம்.பி.,க்கள், தங்கள் கைகளில் இருந்த காகிதங்களை கிழித்து, சபாநாயகர் முன் வீசினர். இதையடுத்து, சபாநாயகர் ஓம் பிர்லா சபையை ஒத்தி வைத்தார்.
இதற்கிடையே, அனுராக் தாக்குர் உரையை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி மீது, உரிமை மீறல் தீர்மானத்தை காங்., கொண்டு வந்துள்ளது.
பஞ்சாப் முன்னாள் முதல்வரும், காங்., - எம்.பி.,யுமான சரண்ஜித் சிங் சன்னி, இந்த தீர்மானத்தை, லோக்சபா செயலக செக்ரட்டரி ஜெனரலை சந்தித்து முறைப்படி வழங்கி உள்ளனர்.

பதிவேற்றம்

ராகுல் குறித்து அனுராக் தாக்குர் மறைமுகமாக பேசிய கருத்து, சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதி மட்டும் எடிட் செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
ஆனால், மத்திய அரசின் 'சன்சத்' டிவியில், எடிட் செய்யப்படாத உரை ஒளிபரப்பானது. மேலும், பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோவிலும் எடிட் செய்யப்படாத உரை இருந்ததாகக் கூறப்படுகிறது.
சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்த பின், சம்பந்தப்பட்ட செய்தியை எம்.பி., அல்லது மத்திய அமைச்சர் வெளியிட்டால், அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் சபையில் கொண்டு வர, சபை விதிகளில் இடம்உண்டு.
இந்த அடிப்படையில், பிரதமர் மோடி மீது உரிமை மீறல் தீர்மானத்தை காங்., கொண்டு வந்துள்ளது.

ராகுல் மட்டும் கேட்கலாமா?


ராகுலை தவிர, அனுராக் தாக்குரின் பேச்சை யாரும் எதிர்க்கவில்லை. அவர் உத்தரவுப்படி தான், காங்., - எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், ராணுவ வீரர்கள் என எல்லாரது ஜாதி குறித்தும் ராகுல் கேட்கிறார். ஆனால், அவருடைய ஜாதி குறித்து கேட்டால் உடனே கோபமடைகிறார். அது ஏன் என்பது புரியவில்லை.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்