கலவரக்காரர்களுக்கு பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் கடும் எச்சரிக்கை
5 ஆவணி 2024 திங்கள் 08:22 | பார்வைகள் : 2346
பிரித்தானியாவின் Southport பகுதியில் சிறார்களுக்கான கோடைகால முகாமில் Axel Rudakubana என்ற 17 வயது பதின்பருவ சிறுவன் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் Southport, Liverpool, London போன்ற பல்வேறு பகுதிகளில் ஆர்பாட்டக்காரர்கள் போராட்டங்களை முதலில் கையில் எடுத்தனர்.
இரு தினங்களுக்கு முன்பு, Sunderland பகுதியில் நடந்த பேரணியில் பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று பிரித்தானியாவில் குடியேற்ற எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் ரோதர்ஹாமில்(Rotherham) உள்ள ஹோட்டலில் ஒன்றுக்குள் புகுந்து நாற்காலிகளை பொலிஸார் மீது தூக்கி எறிந்து தாக்குதல் நடத்தியதுடன், ஹோட்டலின் ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்தெறிந்து உள்ளனர்.
இந்த போராட்டங்கள் பெரும்பாலும் தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்களாலும், குடியேற்ற எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில், டவுனிங் தெருவில் பேசிய பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், “வன்முறையில் கலந்து கொள்பவர்கள் சட்டத்தின் முழு தீவிரத்தையும் எதிர்கொள்ள நேரிடும்.”
“இந்த கலவரங்களில் நேரடியாகவோ அல்லது இணைய தளம் வழியாகவோ பங்கேற்கும் அனைவரும் இதில் பங்கேற்றதற்காக நிச்சயம் வருத்தப்படுவீர்கள் என்பதற்கு உறுதியளிக்கிறேன் என்று எச்சரித்துள்ளார்.”
தொடர்ந்து பேசிய அவர், “தற்போது ரோதர்ஹாமில்(Rotherham) உள்ள ஹோட்டலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இதற்கு எத்தகைய நியாமும் கற்பிக்க முடியாது”
“இந்த நாட்டில் இருக்கும் அனைவருக்கும் அமைதியாக வாழ்வதற்கான உரிமை உண்டு, ஆனால் இஸ்லாமிய சமுகம் மற்றும் அவர்களின் மசூதிகள் குறிவைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதை பார்க்க முடிகிறது, இது தீவிர வலதுசாரி குண்டர்த்தனம் என்றும் பிரதமர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
மேலும், இது வன்முறை, போராட்டம் கிடையாது என்றும் பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.