வெற்றி பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு..!
27 புரட்டாசி 2024 வெள்ளி 11:31 | பார்வைகள் : 1520
சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகயிருந்த ‘எஸ்டிஆர் 48’ படம் இன்னும் தொடங்காத நிலையில், சிம்பு வேறு ஒரு இயக்குனரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘எஸ்டிஆர் 48’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால், தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்திலிருந்து விலகியதை தொடர்ந்து, புதிய தயாரிப்பாளர் இன்னும் கிடைக்கவில்லை என்பதால், படப்பிடிப்பு தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், சிம்பு தற்போது கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை முடித்த பின்பு, அவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியானது.
’ஓ மை கடவுளே’ என்ற படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் ’டிராகன்’ படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த படத்தை முடித்த பின், அஸ்வத் மாரிமுத்து, சிம்புவின் புதிய படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ‘டிராகன்’ படத்தை தயாரித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.