Paristamil Navigation Paristamil advert login

'மெய்யழகன் படம் ரசிகர்களை கவர்ந்ததா?

'மெய்யழகன் படம் ரசிகர்களை கவர்ந்ததா?

27 புரட்டாசி 2024 வெள்ளி 11:52 | பார்வைகள் : 2131


'96' படம் மூலம் பிரிந்து போன காதலர்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய இயக்குனர் பிரேம் குமார், இந்த 'மெய்யழகன்' படத்தில் பிரிந்து போன உறவுகளின் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பலரும் ஏதோ சில காரணங்களுக்காக தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு, விட்டு, வேறொரு இடத்திற்கு மாற நேரிடும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அந்த ஊர், அந்த வீடு, அங்கு பழகிய உறவினர்கள், நண்பர்கள் என அனைத்துமே நம்முள் நீங்காத நினைவுகளாய் இருக்கும். அப்படியான ஒரு இடத்திற்கு நாம் மீண்டும் செல்ல நேர்ந்தால் அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த 'மெய்யழகன்'.

1996ல் குடும்பத் தகராறு காரணமாக இளைஞனாக இருக்கும் அரவிந்த்சாமியின் குடும்பம் தஞ்சாவூரை விட்டு சென்னைக்கு இடம் பெயர்கிறது. 22 வருடங்களுக்குப் பிறகு 2018ல் தனது சித்தப்பா மகளின் திருமணத்திற்காக அரவிந்த்சாமி மட்டும் தஞ்சாவூர் அருகில் உள்ள நீடாமங்கலம் ஊருக்குப் போகிறார். அவரைப் பார்த்ததிலிருந்து 'அத்தான், த்தான்' என விழுந்து விழுந்து கவனித்துக் கொள்கிறார் உறவினரான கார்த்தி. அந்த கூடுதலான அன்பு, கவனிப்பு ஆரம்பத்தில் சிக்கலாக இருந்தாலும் யாரென்றே தெரியாத கார்த்தியின் பாசத்தில் போகப் போக விழுந்துவிடுகிறார். ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கார்த்தியின் பேச்சு அவருக்கு உணர்த்துகிறது. தன்னையே தனக்கு அடையாளம் காட்டிய கார்த்தி மீது அரவிந்த்சாமிக்கு ஒரு மரியாதையும் ஏற்படுகிறது. அவர்கள் இருவரது பாசப்பிணைப்பு எப்படி போகிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

'அத்தான்' என்பதையே 'த்தான்' என அழைக்கும் கார்த்தி போல இன்றும் நம் ஊர்களில் பல வெள்ளந்தியான பாசக்காரப் பயல்களைப் பார்க்க முடியும். ஊரை விட்டுச் சென்றவர்கள் திரும்ப ஊருக்கு வந்தாலும், அல்லது ஊருக்குள்ளேயே இருப்பவர்களுக்காகவும் எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அவர்களுக்காக எப்போதும் கை கொடுத்து நிற்பார்கள். எந்த நல்லது கெட்டது என்றாலும் அவர்கள்தான் முதலில் ஓடி வருவார்கள். இப்படியான சில மனிதர்களால்தான் பல ஊர்களில் இன்றும் பலரது உறவுகள் ஏதோ ஒரு விதத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

படத்தின் தலைப்பே 'மெய்யழகன்' தான் என்றாலும் அந்தப் பெயரை எப்போது அரவிந்த்சாமி தெரிந்து கொள்வார் என்ற சஸ்பென்ஸ்தான் இந்தப் படத்தின் மொத்த திரைக்கதை. படத்தில் எந்த இடத்தில் கார்த்தி தனது கதாபாத்திரத்திற்காக நடித்தார் என்பதைச் சொல்லவே முடியாது. ஆரம்பம் முதல் கடைசி வரை அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் என்றுதான் சொல்ல முடியும். 'பருத்தி வீரன், கடைக்குட்டி சிங்கம்' படங்களுக்குப் பிறகு கார்த்திக்குப் பெயர் வாங்கித் தரும் ஒரு படம் இது என மெய்யாகச் சொல்லலாம்.

'ரோஜா' படத்தில் 30 வருடங்களுக்கு முன்பு பார்த்த அரவிந்த்சாமி தானா இது என இன்றும் வியக்க வைக்கிறார். அருள்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பின் அத்தனை மொழிகளையும் வெளிப்படுத்தி இருக்கிறார் அரவிந்த்சாமி. குறிப்பாக இரண்டு காட்சிகள் இன்னும் கண் முன் நிழலாடிக் கொண்டிருக்கிறது. தங்கையின் திருமணத்திற்காக அன்பளிப்புகளைக் கொண்டு வந்து அவரே அந்த நகைகளை மாட்டிவிடும் காட்சி, அவரும், கார்த்தியும் ஆற்றங்கரையில் குடித்துக் கொண்டிருக்கும் போது கார்த்தியின் பேச்சைக் கேட்டு, கேட்டு அப்படியே வியந்து போய் பார்க்கும் காட்சி. இந்த இரண்டு காட்சிகளிலும் பேசாமலேயே பார்வைகளால் நம்மை பரிதவிக்க வைக்கிறார்.

படம் முழுவதும் கார்த்தியும், அரவிந்த்சாமியும் ஆக்கிரமித்திருந்தாலும், இருக்கும் ஓரிரு காட்சிகளில் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, ஜெயப்பிரகாஷ் அவ்வளவு அழகாய் நடித்திருக்கிறார்கள். அரவிந்த்சாமியின் முன்னாள் காதலி 'மச்சான்' என அழைத்து அவரது தோளை தொட்டுச் செல்வதும், அரவிந்த்சாமியின் தங்கை அண்ணனைப் பார்த்து கலங்கித் தவிப்பதும், அந்த ஓரிரு நிமிடங்களியே அந்தக் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் நம்மை என்னவோ செய்கிறார்கள்.

நீடாமங்கலம் ஊரில், ஓர் இரவில் நடக்கும் காட்சிகள்தான் அதிகம். திருமண மண்டபத்தில் ஆரம்பித்து அதிகாலையில் கோயில் வரையில் உள்ள காட்சிகளில் ஒவ்வொரு உணர்வையும் தனது ஒளிப்பதிவிலும் கடத்துகிறார் ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு. கோவிந்த் வசந்தா பின்னணி இசை உறவுகளின் உணர்வுகளோடு உறவாடினாலும், பாடல்களில் கமல்ஹாசன் பாடிய 'யாரோ இவன் யாரோ' மட்டுமே மனதில் பதிகிறது.

ஏறக்குறைய மூன்று மணி நேரம் ஓடுகிறது படம். சில காட்சிகள் மிக மெதுவாகப் பயணிப்பதைத் தவிர்த்திருக்கலாம். சில காட்சிகளின் நீளத்தைத் தாராளமாகக் குறைக்கலாம். இடைவேளை வரை போவது தெரியவில்லை. அதன்பின் திரும்பத் திரும்ப அரவிந்த்சாமி, கார்த்தி இருவர் மட்டுமே பேசிக் கொண்டிருப்பது பொறுமையை சோதிக்கிறது.

கார்த்தி சொல்லும் பிளாஷ்பேக்கில் 'ஜல்லிக்கட்டு, தூத்துக்குட்டி துப்பாக்கி சூடு, இலங்கை விவகாரம்' ஆகியவை வலிய திணித்தது போல உள்ளது. அது மையக் கதையிலிருந்து படத்தை ரசிப்பதை விலக வைக்கிறது. கார்த்திக்கும், ஜல்லிக்கட்டு மாடுக்குமான உறவை இந்த அத்தான், மச்சான் உறவில் வைத்ததன் காரணம் சரியா ?. இப்படி சில நெருடலாக இருந்தாலும், ஊரை விட்டு வந்தவர்கள் மீண்டும் தங்கள் ஊருடனும், உறவுகளுடனுமான நெருக்கத்தை வளர்க்க இந்தப் படம் யோசிக்க வைக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்