காயம் குணமாகவில்லை - ஆஸ்திரேலிய தொடரில் முகமது ஷமி விளையாடுவது சந்தேகம்
2 ஐப்பசி 2024 புதன் 12:32 | பார்வைகள் : 948
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேசன் செய்து கொண்டபின் அவர் ஓய்வில் இருந்தார்.
தற்போது முகமது ஷமி பந்துவீச்சு பயிற்சியை தொடங்கி உள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது முழங்கால் வீக்கத்தால் முகமது ஷமி பாதிக்கப்பட்டுள்ளார்.
அதிலிருந்து குணமடைய 6 முதல் 8 வாரங்கள் ஆகும் என்று தெரிகிறது. இதனால் ஆஸ்திரேலிய தொடரில் அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரது காயத்தின் தன்மை குறித்து கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு கண்காணித்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது ஷமி கூறும் போது, நான் திரும்பி வரும்போது எந்த அசவுகரியமும் இல்லை என்பதை உறுதி செய்ய விரும்புகிறேன். இதற்கு எனது உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும்.
நான் எவ்வளவு வலிமையாக திரும்புகிறேனோ, அது எனக்கு நல்லது. நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலிய தொடருக்கு எதிராக நான் அவசரப்பட்டு மீண்டும் காயமடைய விரும்பவில்லை.
நான் ஏற்கனவே பந்துவீச ஆரம்பித்து விட்டேன். 100 சதவீதம் உடற்தகுதி பெறும் வரை காத்திருப்பேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகமது ஷமி கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 50 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடி இருந்தார். அதன்பின் காயம் காரணமாக அவர் போட்டிகளில் பங்கேற்கவில்லை.