கணவன் மனைவிக்குள் பொய்கள் சொன்னா வாழ்க்கையே மாறிடும்!!
3 ஐப்பசி 2024 வியாழன் 14:18 | பார்வைகள் : 1262
எந்த உறவாக இருந்தாலும் நேர்மையாக இருப்பது முக்கியமானது. ஆனாலும் சாதுரியமான, யாரையும் பாதிக்காத சில பொய்களை சொல்வதால் உறவில் சுவாரசியம் கூடும். கணவர்கள் மனைவிகளிடம் சொல்வதால் அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகும். சில பொய்கள் மனைவிகளின் உணர்வுகளை காயப்படுத்தாமல் அவர்களை சந்தோஷத்தில் வைத்திருக்கும். தேவையற்ற மன அழுத்தத்திலிருந்து அவர்களை மீட்டெடுக்க அந்த பொய்கள் உதவும்.
தொடர்ச்சியான பொய்கள் நம்பிக்கை இழக்கச் செய்யும். இது மாதிரியான பெரிய பொய்களை திருமண உறவில் நிச்சயம் தவிர்க்க வேண்டும். கண்ணாடி மாதிரியான தெளிவான உரையாடல் உறவுக்கு வலுசேர்க்கும். இது தவிர கட்டாயம் சொல்ல வேண்டிய பொய்கள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.
உங்களுடைய மனைவி வேலைகளை முடித்துவிட்டு எண்ணெய் வழிந்த முகத்துடன் இருக்கலாம் அல்லது தலையை சரியாக வாரிக் கொள்ளாமல் கலைந்த கூந்தலுடம் இருக்கலாம். எப்படியாக இருந்தாலும், 'நீ இன்னைக்கு அழகா இருக்க!'எனச் சொன்னால் அவர்களுக்கு நிச்சயம் புன்னகை பூ உதட்டில் பூக்கும். இந்த பொய்யை அவ்வப்போது சொல்லி பழகுங்கள்.
உங்கள் மனைவி ஏதேனும் புதிய ரெசிபியை முயற்சி செய்து இருக்கலாம் அல்லது சமைத்த உணவில் உப்பு, காரம் ஏதேனும் குறைவாக, சுவை வழக்கத்தை விட வேறுபாடாக இருக்கலாம். இந்த மாதிரியான சமயங்களில் உடனடியாக உண்மையை சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. முதலில் அதில் உள்ள நிறைகளை கூறி, 'உன்னுடைய சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்' என அவர்களை பாராட்ட வேண்டும். இந்த பொய் மிகவும் முக்கியமானது.
உங்களுடைய மனைவி நாளின் இறுதியில் உங்களுடன் உரையாட விரும்புவார். அந்த சமயத்தில் அவருக்கு நேரத்தை ஒதுக்க தயங்க வேண்டாம். உங்களுக்கு சோர்வாக இருந்தாலும், 'உன்னோடு பேசுவது எனக்கு முக்கியம் நான் இப்போது சோர்வாக இல்லை, என கூறுவது உறவை வலுப்படுத்தும்
சின்ன சின்ன பொய்கள் உறவை அழகாக்கும். ஆனால் அந்த பொய்கள் யாருக்கும் தீங்கு செய்பவையாக இருக்கக் கூடாது. முக்கியமான விஷயங்களில் எப்போதும் பொய் சொல்வதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி பொய் சொல்வதால் உங்கள் மீதான நம்பகத்தன்மையை இழந்து விடுவீர்கள். உங்களுடைய சுய லாபத்திற்காக மட்டும் பொய் சொல்வதை தவிர்ப்பது நல்லது. நம்பிக்கை துரோகம் செய்வதைக் குறித்து கனவிலும் நினைக்காதீர்கள். இது உங்களுடைய திருமண உறவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.
நீங்கள் சொல்லும் பொய்கள் ரசிக்கும்படியாக உண்மை கலந்திருப்பது அவசியம். எப்போதும் மிகைப்படுத்தப்பட்ட அதிகமான பொய்கள் உறவில் உள்ள நம்பகத்தன்மையை சீர்குலைக்கும். அந்த தவறை செய்யாதீர்கள்.
உங்கள் மனைவியின் உணர்வுகளை புண்படுத்தாத விஷயங்களைப் பேச வேண்டும். அவர்களுடைய உணர்வுகளையும், எல்லைகளையும் மீறும் விஷயங்களை குறித்து கவனமாக இருங்கள்.
எப்போதும் உங்களுடைய மனைவியிடம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பேசி பழக முயற்சி செய்யுங்கள். உறவில் சின்ன சின்ன பொய்கள் அவசியமாக இருந்தாலும் எப்போது உண்மை பேச வேண்டுமோ அந்த சமயத்தில் வெளிப்படையாக உண்மைகளை தெரிவிப்பது அவசியம்.
திருமண உறவுகள் நம்பிக்கை, மரியாதை, நல்ல உரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு பொய்யைச் சொல்லலாமா என முடிவு செய்யும் முன்பு சிந்தித்து செயல்படுங்கள். எப்போதும் உங்கள் மனைவியின் உணர்வுகளைக் கருத்தில் கொள்ளுங்கள்.
உங்களுடைய திருமண நாளை மறந்து விட்டதாக பொய் சொல்லிவிட்டு, பின்னர் அவர்களுக்கு சர்ப்ரைஸாக வாழ்த்தி பரிசு வழங்குவது அசரடிக்க வைக்கும். இது உங்களுடைய உறவை பலப்படுத்தும்.
சின்ன பிரச்சனைகள் ஏற்பட்டால் அவை வளர்ந்து பூதாகரமாக மாறுவதற்கு முன்பாக உங்கள் மனைவியிடம் உன்னுடைய கருத்துடன் நான் உடன்படுகிறேன் என கூறி விடுங்கள்.
உங்களுடைய மனைவியை அவ்வப்போது பாராட்டுவதும், அவருக்கு நன்றி கூறுவதும் திருமண உறவில் அடிப்படையானது. நீங்கள் அவரை திருமணம் செய்து கொண்டது சரியான முடிவு என்பதை அவருக்கு உணர்த்தும் வகையில் பேசுங்கள். 'நீ தான் எப்போதும் சிறந்த மனைவி' என அவரிடம் சொல்லுங்கள். அவருடைய நிறைகளை அப்போது குறிப்பிட்டு பேசுங்கள்.
உதாரணத்திற்கு, உன்னுடைய நகைச்சுவை உணர்வு எனக்கு பிடிக்கும். உன்னுடைய விளையாட்டுத்தனத்தை நான் ரசிக்கிறேன். என் கடினமான சூழல்களில் நீ எனக்கு உறுதுணையாக இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். அதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன் என மனைவியை சில ஆதரவு வார்த்தைகளால் பாராட்டுங்கள். இவை பொய்யல்ல.. உண்மை!!