சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா! நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!
30 ஐப்பசி 2024 புதன் 09:47 | பார்வைகள் : 717
நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன் படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 49.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 232 ஓட்டங்கள் குவித்தது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக புரூக் ஹாலிடே 86 ஓட்டங்களும், ஜார்ஜியா ப்ளிம்மர் 39 ஓட்டங்களும் குவித்து அசத்தினர்.
இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும், பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 122 பந்துகளில் 100 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
மற்றொரு பக்கத்தில் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 59 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தார்.
இறுதியில் இந்திய 44.2 ஓவர்களிலேயே 236 ஓட்டங்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.