Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சீரற்ற காலநிலை - பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக நிவாரணம்

இலங்கையில் சீரற்ற காலநிலை - பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக நிவாரணம்

14 ஐப்பசி 2024 திங்கள் 11:26 | பார்வைகள் : 879


இவ்வருடம் இரண்டு தடவைகள் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகவும், அதற்கமைவாக அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு சரியான மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று திங்கட்கிழமை (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குப் பணியை முதன்மைப்படுத்துமாறும், அதன் பின்னர், சேதமடைந்த சொத்துக்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஏற்கனவே கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 50 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக மேலும் மேலும் பணம் தேவைப்படுமாயின் அதற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தார்.

இவ்வருடத்தில் இதற்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தின் போது சேதமடைந்த சொத்துக்கள் புனரமைக்கப்படாத மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான இழப்பீடுகளை வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்த, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி.தர்மதிலக, அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கல, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆசிறி கருணாவர்தன, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே. கருணாநாயக்க, தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் நாமல் இந்திக லியனகே, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ, ஜி.ஏ.கே. திலகரத்ன ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்