போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: மின்துறை அறிவிப்பு
15 ஐப்பசி 2024 செவ்வாய் 03:17 | பார்வைகள் : 1248
சென்னையில் கனமழையின் போது மின்கம்பி அறுந்து விழுவதை தடுக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மின்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: அனைத்து அலுவலர்களும் தங்களின் செல்போனை எந்த காரணம் கொண்டும் ஆஃப் செய்யக்கூடாது. மின் பகிர்மான வட்டத்தில், கோட்ட அளவில், 15 பேர் அடங்கிய, 2 பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும், இயங்கும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். துணை மின் நிலையங்களில் ஜெனரேட்டர், மின் மோட்டார்கள், மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். மின் தடங்கள் ஏற்பட்டாலும், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் செல்போன் டவர்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும்.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்:
தாழ்வாக தொங்கும் மின்சார வயர்களை தொட வேண்டாம்; அருகில் செல்ல வேண்டாம். மின் கம்பத்தில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம். மின் தடை குறித்து, மின்னகத்தை 9498794987 எ ன்ற எண்ணில், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளது.