துவங்கியது மழை: வங்க கடலில் புயல் சின்னம்
15 ஐப்பசி 2024 செவ்வாய் 03:26 | பார்வைகள் : 1438
வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதி கனமழை பெய்யும் என்பதால், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் நாளை, 21 செ.மீ.,க்கு மேல் மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகம் முழுதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:
தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
இன்று அது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.
மேலும் வலுவடைந்து, நாளை வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர மாவட்டங்களை நோக்கி நகரக்கூடும்.
இடி, மின்னல்
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சியும், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் காணப்படுகிறது.
இதற்கு இணையாக, அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, ஏமன் நோக்கி நகர்கிறது.
வளி மண்டல சுழற்சி மற்றும் இரு காற்று இணைவு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், 20 செ.மீ.,க்கு மேல் அதி கனமழைக்கான 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர் மாவட்டங்கள்.
புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில், 12 முதல் 20 செ.மீ., வரை மிக கனமழை பெய்வதற்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், சில இடங்களில் நாளை அதி கனமழை பெய்யலாம் என ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தாலும், அது மெதுவாக நகர்வதால், எதிர்பார்த்ததை விட மிக கனமழை, அதி கனமழை சற்று தாமதமாக வாய்ப்புள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு பாலசந்திரன் கூறினார்.
வதந்திகளை நம்பாதீங்க!
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்களின் அறிவுரைப்படி நிவாரண முகாம்களுக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும். முக்கிய பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகாத வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும். கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு, பொதுமக்கள் கடற்கரை, சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் கூட வேண்டாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். கர்ப்பிணியர், நோயாளிகள், முதியோர்கள் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கையின்படி நடந்து கொள்ள வேண்டும்.-முதல்வர் ஸ்டாலின்
'60 செ.மீ., மழை பெய்தாலும் சமாளிக்கலாம்!'
நீர்வள துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய்கண்டிகை ஏரிகள், 11.2 டி.எம்.சி., கொள்ளளவு உடையவை.பூண்டியில் தற்போது 0.29 டி.எம்.சி.,யும், புழலில் 2.04, செம்பரம்பாக்கத்தில் 1.21, தேர்வாய்கண்டிகையில் 0.10 டி.எம்.சி.,யும் நீர் இருப்பு உள்ளது. சோழவரம் ஏரி வறண்டு கிடக்கிறது. மொத்தமாக சேர்த்து பார்த்தால், 3.64 டி.எம்.சி., மட்டுமே நீர் இருப்பு உள்ளது. நான்கு ஏரிகள் நிரம்புவதற்கு, 7.56 டி.எம்.சி., நீர் தேவைப்படுகிறது. எனவே, 60 செ.மீ., மழை பெய்தாலும், ஏரிகள் நிரம்பி, உபரி நீர் திறப்பதற்கு இம்முறை வாய்ப்பில்லை. அடுத்த மழைக்கு வேண்டுமானால் ஏரிகள் நிரம்பும். இருப்பினும், ஒரே இடத்தில் மழை கொட்டி ஏரிகள் நிரம்பினால், அதை சமாளிப்பதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
12 செ.மீ., மழை
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம், பூதலுாரில் 12 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. கோவை தெற்கில் 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.சென்னை டி.ஜி.பி., அலுவலகம், மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி, கோவை தானியங்கி வானிலை மையம், செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஹிந்துஸ்தான் பல்கலை ஆகிய இடங்களில், தலா 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
உடனே செல்ல முதல்வர் அறிவுரை
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட முன்னேற்பாடுகள் குறித்து, கலெக்டர்கள் விளக்கினர். பின், முதல்வர் பிறப்பித்த உத்தரவுகள்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்க வேண்டும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இன்று முதல் 18 வரை, ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் தேசிய பேரிடர் மீட்புப் படை, தமிழக பேரிடர் மீட்புப் படைகளை, பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு முன்கூட்டியே அனுப்ப வேண்டும் வெள்ளம் வரக்கூடிய பகுதிகளில், மீட்புப் படகுகள் இன்றே நிலைநிறுத்தப்பட வேண்டும் மெட்ரோ மற்றும் மேம்பால ரயில் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் தடையின்றி ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும் முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில், போதுமான உணவு பொருள் இருப்பு வைக்க வேண்டும் பாதிப்பு நேரக்கூடிய பகுதிகளில் இருப்போரை, முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும் முகாம்களில் மருத்துவ வசதிகள் செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் போக்குவரத்து பாதிக்கும் தடங்களில், உடனடியாக மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்ய வேண்டும் மின் உற்பத்தி தடைபடாமல், மின் வினியோகம் சீராக இருக்க கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதல் பணியாளர்கள் அமர்த்த வேண்டும் முதியோர், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணியர், பாலுாட்டும் தாய்மார்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளித்து, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் தடையற்ற குடிநீர் வழங்க, போதுமான ஜெனரேட்டர்கள் வைத்திருக்க வேண்டும்இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.