அறுகம்பே தாக்குதல் திட்டம் - வெளியானது மேலும் பல தகவல்கள்
25 ஐப்பசி 2024 வெள்ளி 12:22 | பார்வைகள் : 1689
அறுகம்பே உட்பட நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வௌியானாலும் இஸ்ரேலியரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் திட்டமிப்பட்டுள்ளதாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்த தாக்குதல் திட்டத்தின் இலக்கு இஸ்ரேலியர் அல்லாத வெளிநாட்டவர்களோ, இலங்கையர்களோ அல்லது வேறு எந்த நாசகார செயலும் அல்ல என தகவல் வௌியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது, தாக்குதல் திட்டம் தொடர்பில் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக பொலிஸார் தடுப்புக் காவல் உத்தரவை பெற்றுள்ளனர்.
“அடுத்தடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.அந்தக் கைதுகள் மூலம்தான் இது தொடர்பாக கூடுதல் பாதுகாப்பை ஈடுபடுத்த வேண்டும் என்பது தெரியவந்தது.
அமெரிக்க தூதரகத்தின் அறிவிப்பு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டதற்கு முந்தைய நாள் இரவிலிருந்தே பொத்துவில் பொலிஸ் பகுதியில் பாதுகாப்பை நிலைநிறுத்தியிருந்தோம்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர், இராணுவம் மற்றும் கடற்படையினர் கூட கடல் பயணங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்