உணவில் பூச்சிகள்...! 2,000 உணவகங்களை மூடும் ஜப்பானின் பிரபல நிறுவனம்

30 பங்குனி 2025 ஞாயிறு 09:17 | பார்வைகள் : 832
வாடிக்கையாளர்களின் புகாரை அடுத்து ஜப்பானின் மிகப்பெரிய உணவக நிறுவனம் ஒன்று சுத்தம் செய்வதற்காக அதன் விற்பனை நிலையங்களை மூடும் முடிவுக்கு வந்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் உணவில் எலி உட்பட பூச்சிகளைக் கண்டறிந்த இரண்டு சம்பவங்களுக்குப் பிறகு அந்த நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
ஜப்பானின் மிகப் பிரபலமான உணவக நிறுவனம் Sukiya. இதன் வாடிக்கையாளர் ஒருவரால் உணவில் பூச்சி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தங்கள் விற்பனை நிலையங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
மட்டுமின்றி, ஜனவரி மாதம் இவர்கள் பரிமாறிய மிசோ சூப்பில் எலி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கடந்த வார இறுதியில் Sukiya நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், ஜப்பான் முழுவதும் கிட்டத்தட்ட 2,000 விற்பனை நிலையங்களில், பெரும்பாலானவற்றை மார்ச் 31ம் திகதி முதல் ஏப்ரல் 4ம் திகதி வரையில் தற்காலிகமாக மூட இருப்பதாகவும், சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
மிசோ சூப்பில் எலி கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பல வாரங்களாக சமூக ஊடக பக்கத்தில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வந்த நிலையிலேயே, தங்கள் தவறை Sukiya நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
இதனையடுத்து Tottori பகுதியில் அமைந்துள்ள தங்கள் உணவகம் ஒன்றை Sukiya நிர்வாகம் தற்காலிகமாக மூடியுள்ளது. மட்டுமின்றி, உடனடி நடவடிக்கை முன்னெடுப்பதாகவும் Sukiya நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
டோக்கியோவில் உள்ள ஒரு வாடிக்கையாளரால் வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட பூச்சி - கரப்பான் பூச்சியின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக இருந்ததாக பரவலாக தகவல் வெளியானதை அடுத்து, நிறுவனம் தற்போது மிகவும் கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரிடம் மேலாளர் மன்னிப்புக் கேட்டு, பணத்தைத் திரும்பக் கொடுத்ததாகவும் Sukiya நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2,000 உணவகங்களில் பெரும்பாலானவற்றை மூடுவதாக சனிக்கிழமை அறிவிப்பு வெளியானதை அடுத்து, Sukiya பங்குகள் விலை வீழ்ச்சியை சந்தித்தது.