தி.மு.க., எம்.பி., கனிமொழிக்கு செலக்டிவ் அம்னீஷியா: சொல்கிறார் அண்ணாமலை

7 பங்குனி 2025 வெள்ளி 03:41 | பார்வைகள் : 179
சென்னையில் தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.,வினரிடம் போலீசார் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: புதிய கல்விக் கொள்கைக்கான கையெழுத்து இயக்கத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேர் கையெழுத்து போட்டு ஆதரவு அளித்து உள்ளனர். குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கையெழுத்து போடுகின்றனர்.
சென்னையில் முன்னாள் கவர்னர் தமிழிசையிடம், போலீசார் நடந்து கொண்ட விதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீதியில் மக்களை சந்திப்பது கட்சிகளின் கடமை.மக்களை ஒருங்கிணைத்து ஜனநாயக முறையில் அவர்களின் கையெழுத்துக்கு வலிமை இருக்கிறது எனபதை எடுத்துக்காட்டும் பா.ஜ., தலைவர்களை சீண்டுவது, தமிழிசையை கைது செய்தது மட்டுமல்லாமல், அவரிடம் 3 மணி நேரம் போலீசார் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. ஆளுங்கட்சியினர் கொடுக்கும் உத்தரவு தவறு என்பதை தெரிந்து, அவர்களாக விடுவித்து உள்ளனர். இது தி.மு.க., அரசின் கோழைத்தனத்தையும் பயத்தையும் காட்டுகிறது.
திருமாவளவன் சி.பி.எஸ்.இ., பள்ளி நடத்துகிறார். மும்மொழிக் கொள்கை குறித்து பேசுவதற்கான திராணியை அவர் இழந்துவிட்டார். பொய் பேசியே திராணி இழந்துவிட்டார்.3வது மொழி கட்டாயம் ஹிந்தி சொல்லி கொடுக்கும் திருமாவளவன், தமிழக மக்களுக்கு பாடம் எடுக்கிறார். போலி அரசியல்வாதிகளை தோல் உரித்து கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் வெற்றி தான்.
தி.மு.க., எம்.பி., கனிமொழிக்கு 'செலக்டீவ் அம்னீஷியா'. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் தி.மு.க., அங்கம் வகித்த போது சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ.676 கோடியும், தமிழ் வளர்ச்சிக்கு ரூ.75 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் ஹிந்தியை வளர்க்க, பார்லிமென்டில் 170 பரிந்துரைகள் வைத்தார். இன்று சென்னையில் மேடை ஏறி அவர் ஹிந்தி எதிர்ப்பு குறித்து பேசுகிறார். இந்த கொடுமை எல்லாம் பார்க்க வேண்டிய காலகட்டத்திற்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
அப்போது, தமிழ் வளர்ச்சிக்கு தி.மு.க., எதுவும் கிள்ளிப் போட்டதா? கூட்டணி ஆட்சியில் நடந்தது எல்லாம் கனிமொழி மறந்துவிட்டார். தற்போது அரசியலுக்காக பேசிக் கொண்டு உள்ளார். மொழியை தடுக்க இவர்களுக்கு உரிமை இல்லை. அதற்காக அவர்களுக்கு மக்கள் ஓட்டுப்போடவில்லை. நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. எதற்காக இரண்டு வகையான சமுதாயத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும். இதற்கு தமிழக அரசிடம் பதில் இல்லை. தேவையில்லாமல் தொகுதி மறுசீரமைப்பு என பேசிக் கொண்டு உள்ளார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
முன்னதாக 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழக அரசு நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு, தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன.
ஊழல் நாடாக தமிழகத்தை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவு, இன்று டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது.
பன்மொழி கற்கும் உங்கள் கட்சிக்காரரின் குழந்தையை அழைத்து, இருமொழி கற்பதன் நன்மைகள் என்று ஒரு காணொளியை வெளியிடச் செய்து இந்தச் செய்தியை வழக்கம்போல திசைதிருப்ப முடியுமா என்று பாருங்கள். வெட்கக்கேடு! இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளர்.