அமெரிக்காவிலிருந்து வெளியேறும் கட்டாயத்தில் 1 லட்சம் இந்தியர்கள்

7 பங்குனி 2025 வெள்ளி 08:44 | பார்வைகள் : 256
அமெரிக்க குடியுரிமை விதிகளில் மாற்றம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளால், எச்1பி விசா வைத்துள்ள பெற்றோருடன் குழந்தையாகச் சென்று, தற்போது 21 வயதை கடந்த ஒரு லட்சம் இந்தியர்கள் அந்நாட்டில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எச் 1பி விசா
அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக, எச்1பி விசா வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும், 65,000 பேருக்கு இந்த விசா வழங்கப்படும். இதைத் தவிர, அமெரிக்க கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு முடிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த, 20,000 பேருக்கும் எச்1பி விசா வழங்கப்படும்.
இந்த விசாவை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இவ்வாறு எச்1பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றுவோர், தங்களுடைய குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியும். இதற்காக, அந்தக் குழந்தைகளுக்கு எச்4 என்ற விசா வழங்கப்படும். அமெரிக்க குடியுரிமை சட்டங்களின்படி, 21 வயது வரையுள்ளவர்களே, எச்1பி விசாவில் பணியாற்றும் பெற்றோரைச் சார்ந்திருப்பதாக கருதப்படுவர்.
அந்த வயதைத் தாண்டியவர்களுக்கு, வேறு வகையான விசாவுக்கு மாறுவதற்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டு வந்தன. அதாவது அவர்களும் ஏதாவது வேலையைத் தேடி அதற்கேற்ப அமெரிக்க விசாவை பெற்றுக் கொள்ளலாம்.
தற்போதைய நிலையில், அமெரிக்காவில் எச்1பி விசாவில் பணியாற்றும் இந்தியர்கள், கிரீன் கார்டு எனப்படும் நிரந்தரமாக அமெரிக்காவில் வசிக்கும் உரிமையைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் 12 ஆண்டுகளில் இருந்து, 100 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
அமெரிக்க குடியேற்றத் துறை புள்ளி விபரங்களின்படி, 2023 மார்ச் நிலவரப்படி, எச்1பி விசாவில் பணியாற்றும் இந்தியர்களின் 1.34 லட்சம் குழந்தைகள், 21 வயதைத் தாண்டும் நிலையில் இருந்தனர்.
சந்தேகம்
ஏற்கனவே, எச்1பி விசாவுக்கு அமெரிக்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 21 வயதை பூர்த்தி செய்யும் பெற்றோரை சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு, வேலைக்கான விசா வழங்குவதற்கு டெக்சாஸ் நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது.
இந்தக் காரணங்களால், 21 வயது நிரம்பிய ஒரு லட்சம் இந்திய இளைஞர்கள் அமெரிக்காவில் இருந்து கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலையில் உள்ளனர். இவர்கள் கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.
ஆனால், அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம். இதனால், இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவுக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.