Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் பா.ஜ., கூட்டணிக்காக தவம் கிடக்கிறார்கள்: அண்ணாமலை

தமிழகத்தில் பா.ஜ., கூட்டணிக்காக தவம் கிடக்கிறார்கள்: அண்ணாமலை

8 பங்குனி 2025 சனி 06:07 | பார்வைகள் : 142


பா.ஜ., கூட்டணி வேண்டாம் என்றவர்கள், தற்போது கூட்டணி வேண்டும் என தவம் கிடக்கிறார்கள்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

தி.மு.க.,வினரின் வேலை

கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: பா.ஜ., போஸ்டரில் சந்தான பாரதி புகைப்படம் இடம்பெற்றது தி.மு.க.,வினரின் வேலை. பாஜ., போஸ்டரில் மோடி தேசிய தலைவர்களின் புகைப்படம் மட்டும் தான் இருக்கும். நாங்கள் சொல்லும் வாதங்களை தி.மு.க.,வினரால் எதிர்கொண்டு பேச முடியவில்லை. நாங்கள் சொல்வது சரி, தவறு என பேசாமல், போஸ்டரை ஒட்டி அசிங்கப்படுத்த நினைத்தால், தி.மு.க., தன்னை கேவலப்படுத்திக் கொண்டு உள்ளது. போஸ்டரை ஒட்டியதை கண்டுபிடிக்க வேண்டியது போலீசாரின் வேலை.

அரசியல் புரட்சி

தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து போட்டதற்கு அ.தி.மு.க.,வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார் நீக்கப்பட்டது, தமிழகத்தில் பா.ஜ.,வின் இயக்கத்திற்கு கிடைத்த சான்று. கையெழுத்து இயக்கம் அரசியல் புரட்சியாக மாறி இருக்கிறது. தமிழகம் முழுதும் அரசு பள்ளி மாணவர்கள் வரிசையில் நிற்கின்றனர். அவர்களை எங்கள் இடத்திற்கு வரக்கூடாது என சொல்ல முடியுமா? சீருடையுடன் வந்து கையெழுத்து போடக்கூடாது என சட்டம் இருக்கிறதா? அவர்களுக்கு மூன்று மொழி படிக்க ஆசை இருக்கிறது. கையில் பேனாவை வலுக்கட்டாயமாக கொடுத்து கையெழுத்து போடுங்கள் என வலியுறுத்தினோமா? ஆளுங்கட்சியினருக்கு பயம். மூன்று மொழி வேண்டும் என மாணவர்கள் தெளிவாக பேசுகின்றனர்.பெரும் தலைவர்கள் சி.பி.எஸ்.இ., படித்து மூன்று மொழியாக ஹிந்தி நடத்துகின்றனர். அரசு பள்ளி மாணவர்கள் ஆதரவு கொடுப்பதால், எரிச்சல் அடைந்து பா.ஜ.,வினர் மீது பாய்வது நியாயமா

உதயநிதி இயக்கம் என்ன ஆனது

பா.ஜ., சாராத மாநில முதல்வர்ளுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய எத்தனை கடிதத்திற்கு பதில் வந்துள்ளது.நீட் தேர்வுக்காக எழுதிய கடிதம் என்ன ஆனது. பா.ஜ., கையெழுத்து இயக்கம் சர்க்கஸ் போன்று உள்ளதாக முதல்வர் கூறுகிறார். நீட் தேர்வுக்காக துணை முதல்வர் உதயநிதி நடத்திய கையெழுத்து இயக்கம் என்ன ஆனது. நீட் தேர்வுக்காக வாங்கிய கையெழுத்து குப்பை தொட்டியில் கிடந்தது. எத்தனை பேர், ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை பேர் கையெழுத்து போட்டனர் என தகவல் உள்ளதா? உதயநிதியிடம் கையெழுத்து இயக்கம் என்ன ஆனது என கேட்காமல் பா.ஜ.,வை பேசுவது வேடிக்கை.மும்மொழிக் கொள்கையை வைத்து தேர்தலை சந்திக்க பா.ஜ., தயார். இரு மொழி கொள்கையை முன்வைக்க நீங்கள் தயாரா. அதற்கு தி.மு.க., தயாராக இல்லை. வெறும் வாய்ச்சவடால் விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்.

நம்ப மாட்டார்கள்

மேகதாது அணைக்கு வரைவு அறிக்கை தயாராகிவிட்டது. அதற்கு மத்திய அரசு அணை நிதி கிடைக்காது. இதற்கு எதிராக சித்தராமையா, டிகே சிவகுமாருக்கு ஏன் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதவில்லை. தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுத்துவிட்டு காங்கிரசுடன் குப்பை கொட்ட வேண்டும். சம்பந்தம் இல்லாமல் மொழி பிரச்னைக்கு கடிதம் எழுதுகிறார். தமிழக முதல்வராக இருந்தால், குடும்பத்திற்கு இல்லாமல் மக்களின் முதல்வராக இருந்தால், விவசாயிகளின் முதல்வராக இருந்தால், மேகதாது அணை கட்டுவதை ஏன் எதிர்க்கவில்லை. கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதி கண்டிக்கவில்லை. நாளை எழுந்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவார். முல்லை பெரியாறில் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுத்தாகி விட்டது. மேகதாதுவில் உரிமையை விட்டு கொடுக்க தயாராகிவிட்டார். பக்கத்து மாநிலத்திற்கு உரிமையை விட்டு கொடுத்துவிட்டு, தமிழகத்தின் உரிமையை காப்பார் என யாரும் நம்ப மாட்டான். தமிழக உரிமையை முதல்வர் ஸ்டாலின் காப்பார் என கோமாளி கூட நம்ப மாட்டான்.

பெருமை

பா.ஜ., தீண்டத்தகாத கட்சி. நோட்டா கட்சி. பா.ஜ., வந்ததால் தோற்றோம் என்றவர்கள் இன்று பா.ஜ., வேண்டும் என தவம் இருக்கும் சூழ்நிலையை தலைவர்களும் தொண்டர்களும் உருவாக்கி உள்ளது பெருமை அளிக்கிறது. பா.ஜ., இல்லாமல் அரசியல் இல்லை என்ற சூழ்நிலையை உருவாகி உள்ளது. மற்றபடி எந்த கட்சியையும், தலைவரையும் குறைத்து பேசவில்லை. யார் முதல்வர், யார் முக்கிய கட்சி, யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது. இன்றைக்கு தே.ஜ., கூட்டணி பலமாக இருக்கிறது. பலமாக கொண்டு இருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்