ராஜேந்திரபாலஜியின் மிரட்டல் பேச்சு; எடப்பாடி பழனிசாமியுடன் மாபா. பாண்டியராஜன் சந்திப்பு

9 பங்குனி 2025 ஞாயிறு 15:37 | பார்வைகள் : 170
விருதுநகரில் கடந்த 5ம் தேதி இரவு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, மாபா. பாண்டியராஜன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அந்த கூட்டத்தில் ஒரு நிர்வாகி முன்னாள் அமைச்சருக்கு சால்வை அணிவிக்க வரிசையில் வராமல் மேடைக்கு வேகமாக வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரபாலாஜி அந்த நிர்வாகியை கண்டித்தார். மேலும், அவரின் கன்னத்தில் ராஜேந்திர பாலாஜி அறைந்தார். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனை தொடந்து சென்னை திரும்பிய முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன் அளித்த பேட்டியில் ராஜேந்திரபாலாஜி குறுநில மன்னர்போல் செயல்படுகிறார் என்று விமர்சித்தார்.
இதனால், முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, மாபா.பாண்டியராஜனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
அதேவேளை, விருதுநகர் மாவட்டம் சிவாகாசியில் நேற்று அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ராஜேந்திரபாலாஜி முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜனை மிரட்டும் வகையில் பேசினார்.
கூட்டத்தில் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது,
கட்சி வெற்றிபெற்றாலும், தோல்வியடைந்தாலும் இந்த இயக்கத்தில் இருப்பவன் நான். அ.தி.மு.க.வை எதிர்க்கும் தி.மு.க.வுக்கு நான் குறுநில மன்னர்தான். அ.தி.மு.க.தான் என் உயிர். அ.தி.மு.க. ரத்தம்தான் என் உடலில் ஓடுகிறது. மாபா. பாண்டியராஜன் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பா.ஜ.க. , தே.மு.தி.க. ஆகிய கட்சிகளில் இருந்துவிட்டு அ.தி.மு.க.வுக்கு வந்தவர். என்னிடமா போட்டி போடுகிறீர்கள்? உங்களைப்போல் இந்த இயக்கத்தை காட்டி கொடுத்துவிட்டு ஓடமாட்டேன்.
அணி மாறிச்சென்றவர்கள் சால்வை போடும்போது அதை வேடிக்கை பார்க்க நாங்கள் என்ன கிறுக்கர்களா? தொலைத்துவிடுவேன். நீங்கள் தைரியமான ஆளாக இருந்தால் உங்கள் கருத்தை விருதுநகரில் சொல்லி இருக்க வேண்டும். சென்னைக்கு ஓடி ஏன் கருத்து கூற வேண்டும்? என்னை மீறி விருதுநகரில் உங்களால் என்னை செய்துவிட முடியும்? என்று பேசினார்.
மாபா. பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ராஜேந்திரபாலாஜி பேசிய நிகழ்வு அ.தி.மு.க. அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன் நேற்று இரவு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற மாபா. பாண்டியராஜன் அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ராஜேந்திர பாலாஜியின் பேச்சு எடப்பாடி பழனிசாமியிடம், மாபா.பாண்டியராஜன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, மக்களை சந்திப்பது என இப்போதே தங்கள் கள நடவடிக்கையை தொடங்கிவிட்டனர். இந்த நிகழ்வுகளின்போது ஒரேகட்சிக்குள் முக்கிய நிர்வாகிகள் இடையே கருத்துவேறுபாடு, மோதல் போக்கு ஏற்படுவது அரசியலில் இயல்பான ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.