கோடைகாலத்தை சமாளிக்க கிருஷ்ணா நதி நீரை திறக்கணும்; ஆந்திராவிடம் கோரிக்கை

14 பங்குனி 2025 வெள்ளி 14:52 | பார்வைகள் : 246
கோடையில் சென்னையின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏப்ரல் மாதத்திற்குள் கிருஷ்ணா நதி நீர் வழங்குமாறு ஆந்திராவை கேட்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னையின் குடிநீருக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, தெலுங்கு- கங்கை திட்ட கால்வாய் மூலம் கிருஷ்ணா நதி நீர் வழங்கப்படுகிறது. கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையான, திருவள்ளூர் மாவட்டம் வழியாக சென்னையை வந்தடையும்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஐந்து நீர்த்தேக்கங்களில் தற்போது 79.4 சதவீதம் தண்ணீர் தேங்கியுள்ளது. பகல் நேர வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், வரும் நாட்களில் இந்த தண்ணீர் அளவு கணிசமாக குறையும்.
எனவே சென்னை மக்களுக்கு கோடையில் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக தெலுங்கு கங்கை திட்டத்தில், ஏப்ரல் மாதத்தில் தண்ணீர் வழங்கும்படி ஆந்திராவை கேட்க தமிழக நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஜூலை முதல் அக்டோபர் மற்றும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை இரண்டு காலகட்டங்களில் நீர் திறந்து விடப்படும். ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் சென்னைக்கு 4,000 மி.கனஅடி தண்ணீர் திறக்கப்படும். இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கிருஷ்ணா நீர் பிரதானமாக சேகரிக்கப்படும் பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு தற்போது கிட்டத்தட்ட 86% ஆக உள்ளது. இருப்பினும், கோடை காலம் ஆரம்பித்த பிறகு தண்ணீர் கணிசமாக குறையும். அந்த நேரத்தில் கிருஷ்ணா நதி நீர் வரும் பட்சத்தில் பயனுள்ளதாக இருக்கும்.கிருஷ்ணா நீர் தருவதில் ஆந்திராவுக்கு பிரச்சனை எதுவும் இருக்காது. கண்டலேறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.
சென்னை மாநகரில் தற்போது நாளொன்றுக்கு 106 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் 100 கோடி லிட்டர், வீட்டு இணைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. கண்டலேறு - பூண்டி இடையிலான தண்ணீர் வரத்து கால்வாய் பராமரிப்பு பணிகள் முழுமையாக நடைபெறும் பட்சத்தில், தண்ணீர் சிரமமின்றி எளிதில் வந்து சேரும். பராமரிப்பு பணிகளுக்காக கடந்தாண்டு நீர்வளத்துறை 100 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.