உடற்பயிற்சியின் சில உண்மைகள்...............
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10585
உடல் உழைப்புக்குறைந்த இக்காலத்தில்,பலரும் உடற்பயிற்சியின் அவசியத்தை உணர்ந்து வருகிறார்கள்.அதனால் தான், அதிகாலையில் பலரும் பூங்காக்கள்,திறந்த வெளிகளில் மெல்லோட்டம் ஓடுகிறார்கள், நடக்கிறார்கள், உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று பயிற்சி செய்கிறார்கள்.
சிலர் வீட்டிலேயே உடற்பயிற்சிக் கருவிகளை வாங்கிப் போட்டு பயிற்சி செய்கிறார்கள். சரி,உடற்பயிற்சி என்னென்ன நன்மைகளை அளிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? இதோபட்டியல்...
* உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கும், நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்கும் உதவுகிற ஒரே தீர்வு உடற்பயிற்சி.
* உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் நன்றாக விரிவடையும். உடலில் சோர்வு நீங்கும், மனதில் உற்சாகம் பிறக்கும்.
* நிம்மதியான தூக்கம் வரும், எந்தப் பக்கவிளைவும் இல்லாதது.
* தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்குப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள்கூட குறையும் என்கிறது ஆராய்ச்சி.
* வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஓர் ஆராய்ச்சி. மாரடைப்பு மட்டுமல்ல, பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாகக் குறையும்.
* ரத்த ஓட்டம் சீராகும், உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும், மற்றவர்களுடன் உரையாடியபடியே நடக்கும்போது மனதிலும், உடலிலும் உற்சாகம் பிறக்கும்.
* தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எடை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது, உடலில் கொழுப்பு சேர்வதில்லை.
* வாகன வசதி, பொது போக்குவரத்து வசதி குறைந்த அந்நாட்களில், பலருக்கும் கால்களே பயண உபகரணங்களாக இருந்தன. அதனால் நோய், நொடிகளும் குறைந்தன.
* அதிகாலை வேளையில் எழுவதே நல்ல விஷயம் தான். காலையில் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் உள்ளவர்களுக்கு, அதிகாலையில் எழும் பழக்கமும் ஏற்படுகிறது.
* காலை வேளையில் சுத்தமான காற்றைச் சுவாசிக்க முடிகிறது. உடற்பயிற்சியால் உள்ளுக்குள் செல்லும் ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கிறது. இன்னும் பல நன்மைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். சோம்பலை உதறி, இன்றே உடற்பயிற்சியில் இறங்குங்க!