Paristamil Navigation Paristamil advert login

சொத்து குவிப்பு வழக்கில் இன்னொரு அமைச்சருக்கும் சிக்கல்; பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து

சொத்து குவிப்பு வழக்கில் இன்னொரு அமைச்சருக்கும் சிக்கல்; பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து

26 சித்திரை 2025 சனி 12:42 | பார்வைகள் : 168


சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன் ஆகியோரை விடுவித்து, கடலுார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம். 1996 - 2001 மற்றும் 2006 -- 2011ம் ஆண்டுகளில், அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2004 மற்றும் 2011ல், லஞ்ச ஒழிப்புத்துறை, இரு வழக்குகளை பதிவு செய்தது.

முதல் வழக்கில் பன்னீர்செல்வம், அவரது மனைவி செந்தமிழ்செல்வியும், இரண்டாவது வழக்கில் இவர்களுடன் மகனும் சேர்க்கப்பட்டார். இவர்கள் மீதான வழக்கை விசாரித்த கடலுார் நீதிமன்றம், கடந்த 2007ல் ஒரு வழக்கிலும், 2016ல் மற்றொரு வழக்கிலும், மூவரையும் விடுவித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை, நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார்.

இருதரப்பு வாதங்களுக்குப்பின், இந்த வழக்கில் நீதிபதி பி.வேல்முருகன் நேற்று அளித்த உத்தரவில், பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து, கடலுார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க, கடலுார் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்