பெண்களுக்கு விரைவில் வயதான தோற்றம் தரும் கணினி வேலை
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9495
தகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சியினால் இன்றைக்கு அனைத்து துறைகளிலுமே கணினி பயன்பாடு என்பது இன்றியமையாததாகிவிட்டது. இதில் தகவல் தொழில்நுட்ப துறை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றுபவர்கள், அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்களை விரைவில் முதுமை ஆட்கொள்வதாக ஆய்வு முடிவு ஒன்று எச்சரிக்கின்றது. குறிப்பாக பெண்களுக்கு முதுமை சீக்கிரம் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த அழகியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மைக்கேல் ப்ரகர், கணினியில் பணியாற்றும் ஏராளமான பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கணினி முன்னர் ஒருவர் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் அவரது கீழ் தாடை தொங்கி போய்விடும் என்றும், இதற்கு காரணம் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கணினியில் வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலான நேரம் கடு கடுவென இருப்பதற்கு, காரணம் அவர்கள் நீண்ட நேரம் கணினி முன்னர் அமர்ந்து மிக அதிகமாக கவனம் செலுத்தி வேலை செய்வதுதான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பெண்களுக்கு நெற்றியில் விரைவிலேயே சுருக்கம் மற்றும் கண்களை சுற்றி தோல் சுருக்கம் போன்றவை ஏற்படுகிறது. எனவே கணினி முன்பு அமர்ந்து வேலை செய்தாலும் சிறிது நேரம் எழுந்து நடப்பது, மனதிற்கு பிடித்தவருடன் உரையாடுவது என அடிக்கடி ரிலாக்ஸ் செய்வது மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.