கர்ப்ப காலத்தில் கிரீன் டீ குடிக்கலாமா?
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9404
கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களுடைய உடல் நலனுடன் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு அதற்கேற்ப உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியமாகிறது. ஏனெனில் எந்த உணவு எடுத்துக்கொண்டாலும் அது நஞ்சுக்கொடி மூலம் கருவறையை சென்றடையும்.
அங்கு வளரும் குழந்தைக்கு தேவையான உணவுகளை வழங்கும் பணியை நஞ்சுக்கொடி மேற்கொள்ளும். ஆதலால் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கும் அம்மா, ஆரோக்கியமிக்கவளாக இருக்க, சத்துமிக்க உணவுகளை சாப்பிடுவது அவசியம். அதுபற்றி பார்ப்போமா!
* கர்ப்பிணிகளுக்கு வழக்கத்தை விட கால்சியம் சத்து அதிகமாக தேவைப்படும். அதற்கேற்ப உணவு வகைகளின் தேர்வு அமைய வேண்டும்.
* பாலில் கால்சியம் சத்து அதிகமாக இருக்கும். எனினும் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை பருகுவது சிறந்ததாக இருக்கும்.
* பருப்பு, பீன்ஸ், பயறு வகை உணவுகள் போன்றவைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* கர்ப்ப காலத்தில் மயக்கம், குமட்டல் கர்ப்பிணிகளுக்கு தீராத பிரச்சினையாக இருக்கும். அதற்கு வாழைப்பழம் சாப்பிடுவது சிறந்த தீர்வாக அமையும்.
* கர்ப்பிணிகள் டீ, காபி பருகுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் அதிகமாக காபி குடித்து வந்தால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குழந்தை எடை குறைவாகவும் பிறக்கக்கூடும். காபியில் இருக்கும் காபின் அதற்கு காரணம். எனவே காபி பருகுவதை முடிந்த அளவிற்கு தவிர்ப்பது நல்லது. ஆசைப்பட்டால் 200 மி.லி.க்கும் குறைவாக பருக வேண்டும். காபியை விட டீயில் காபின் அளவு குறைவாக இருக்கும். டீ பருக விரும்பினால் குறைந்த அளவு டீத்தூள் கலந்து தயாரிக்கப்பட்ட டீயை குடிக்கலாம். டீயையும் அதிகமாக குடிக்கக் கூடாது.
* அதேவேளையில் கர்ப்பிணி பெண்கள் கிரீன் டீ பருகுவதை அறவே தவிர்த்து விட வேண்டும். அதில் காபின் அளவு அதிகம்.
* கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு இரும்பு சத்து அதிகமாக தேவைப்படும். எனவே இரும்பு சத்து மிக்க உணவு பொருட்களை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக கீரையை தொடர்ந்து சமையலில் பயன்படுத்திவர வேண்டும். இரும்பு சத்துக்களை கொண்ட அது உடலுக்கு வலிமையை கொடுக்கக்கூடியது. கொழுப்பு குறைவான இறைச்சிகளையும் சாப்பிடலாம்.
* கர்ப்பிணிகள் தண்ணீர் அதிகமாக பருக வேண்டியிருக்கும். அதற்கு ஆரஞ்சு பழம் சாப்பிடுவது நல்லது. அதில் இருக்கும் நார்ச்சத்து உடலில் நீரின் அளவை சமநிலையில் வைத்துக்கொள்ள உறுதுணையாக இருக்கும்.
* கர்ப்பிணி பெண்கள் அதிக அளவு திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அது சருமத்தை வறட்சியிலிருந்து மீட்டு ஈரப்பதமாக வைத்துக் கொள்ள உதவும்.
* கர்ப்பிணி பெண்கள் முட்டை சாப்பிடுவது நல்லது. அதில் புரதச்சத்து நிறைய உள்ளது. மற்றும் உடலுக்கு தேவையான அமினோ அமிலத்தையும் வழங்குகிறது.