பன்னீர் குடைமிளகாய் குழம்பு
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 11504
குடைமிளகாயில் அதிக அளவில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், இதனை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது. அதுமட்டுமின்றி குடைமிளகாயை கோடைகாலத்தில் அதிகம் சாப்பிட்டால், வறட்சி ஏற்படாமல் தடுக்கலாம். அதிலும், அதனை பால் பொருட்களில் ஒன்றான பன்னீருடன் சேர்த்து, குழம்பு போல் செய்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு அளவே இருக்காது. மேலும் இந்த பொருட்களை வைத்து பல முறைகளில் சமைக்கலாம். சரி, இப்போது குடைமிளகாய் மற்றும் பன்னீரை சேர்த்து, வட இந்திய சுவையில் எப்படி குழம்பு செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம் (சிறியதாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பன்னீர் துண்டுகளை போட்டு, 2 நிமிடம் லேசான பொன்னிறத்தில் வந்ததும், அதனை ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே எண்ணெயில் சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
தக்காளியானது நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் மல்லித் தூள் சேர்த்து கிளற வேண்டும். பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு, இறுதியில் பன்னீர் துண்டுகளைப் போட்டு, மூடி 6-7 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது அருமையான சுவையில் பன்னீர் குடைமிளகாய் குழம்பு ரெடி!!! இதன்மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சாதத்துடனோ அல்லது சப்பாத்தியுடனோ சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.