Paristamil Navigation Paristamil advert login

முட்டை தேங்காய் மசாலா

முட்டை தேங்காய் மசாலா

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10517


 முட்டையில் புரோட்டீன், கால்சியம், வைட்டமின் டி போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால், ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய சத்துக்களை பெறலாம். பொதுவாக முட்டையை ஆம்லெட் அல்லது வேக வைத்து அப்படியே சாப்பிடுவது என்று தான் இருப்போம். இப்போது அதனை வேக வைத்து, மசாலா செய்து, மதிய வேளையில் சாதத்துடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த முட்டை தேங்காய் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 

 
 
தேவையான பொருட்கள்: 
 
முட்டை - 4 (வேக வைத்தது) 
தேங்காய் விழுது - 1/2 கப் 
வெங்காயம் - 1 (அரைத்தது) 
தக்காளி - 1 (அரைத்தது) 
பூண்டு - 4-5 (லேசாக தட்டியது) 
பச்சை மிளகாய் - 3 
மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
பட்டை - 1 இன்ச் 
கிராம்பு - 1 
பிரியாணி இலை - 1 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும். 
 
அடுத்து பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பின்பு அரைத்து வைத்திருக்கும் தக்காளியை ஊற்றி, 2-3 நிமிடம் கிளற வேண்டும். 
 
பிறகு மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து, உப்பு போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி, நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். 
 
மசாலா நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள முட்டையை இரண்டாக வெட்டி போட்டு, ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான முட்டை தேங்காய் மசாலா ரெடி!!! இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்