Paristamil Navigation Paristamil advert login

இறால் குடைமிளகாய் குழம்பு

இறால் குடைமிளகாய் குழம்பு

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10439


பொதுவாக கடல் உணவுகளில் இறால் மிகவும் சுவையாக இருக்கும். இறாலுக்கு என்றே நிறைய பிரியர்கள் உள்ளனர். இத்தகைய இறாலை இதுவரை தனியாகத் தான் குழம்பு செய்திருப்போம். ஆனால் இப்போது அவற்றை ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்திருக்கும் குடைமிளகாயுடன் சேர்த்து குழம்பு செய்யப் போகிறோம். அதிலும் சற்று வித்தியாசமாக, கோடையில் அதிகம் கிடைக்கும் மாங்காயையும் சேர்த்து செய்யலாம். சரி, அந்த சுவையான இறால் குடைமிளகாய் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 


தேவையான பொருட்கள்: 
 
இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது) 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பூண்டு - 8 பல் (நறுக்கியது) 
குடைமிளகாய் - 1 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது)
புளி சாறு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மாங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது) 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 2 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சற்று அதிகமாக எண்ணெய் ஊற்றி, இறாலைப் போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும். 
 
பின்பு அதில் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து, 3 நிமிடம் வதக்கிக் கொள்ளவும். பிறகு தக்காளி, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் கலவை ஒன்று சேரும் வரை வதக்கவும். பின் புளி சாறு மற்றும் துருவிய மாங்காய் சேர்த்து, 3-4 நிமிடம் கிளறி, 2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு குழம்பை கொதிக்க வைக்க வேண்டும். 
 
இறுதியில் குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் பொரித்து வைத்துள்ள இறாலை சேர்த்து 8-10 நிமிடம் கொதிக்க வைத்து, இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான இறால் குடைமிளகாய் குழம்பு ரெடி!!! இதனை சூடான சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
 

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்