Paristamil Navigation Paristamil advert login

எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்: அமித்ஷா, ஜே.பி.நட்டாவை சந்திக்கிறார்

எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்: அமித்ஷா, ஜே.பி.நட்டாவை சந்திக்கிறார்

14 புரட்டாசி 2023 வியாழன் 08:24 | பார்வைகள் : 3907


பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) டெல்லி செல்கிறார். அங்கு அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் களம் பரபரப்பாகி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' என்ற கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன. அடிக்கடி ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் வியூகங்களை உடைத்து 'ஹாட்ரிக்' வெற்றி பெற பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான கூட்டணியை பலப்படுத்தி பிரசார கூட்டங்கள் நடத்தி, மக்களிடம் அரசின் திட்டங்களை எடுத்து சொல்லி ஆதரவு திரட்டி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல்களில் வெற்றி பெறவும் பா.ஜ.க. - காங்கிரஸ் கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு இருக்கின்றன. கூட்டணி கட்சிகளும் களப்பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன.

பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை இதற்கிடையில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

எடப்பாடி பழனிசாமி பயணம் 

அதன்படி இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று டெல்லிக்கு செல்கிறார். 

நாடாளுமன்ற கூட்டத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடரும் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்துள்ளார். கூட்டணியை உறுதி செய்யும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த கூட்டத்துக்கு பிறகு ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி தனித்தனியே சந்தித்து, பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு இடையே அ.தி.மு.க.வை கைப்பற்றி இருக்கும் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கைகளால் கவனம் ஈர்த்து வருகிறார். 

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், 'நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரலாம்' என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார். 

இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்