Paristamil Navigation Paristamil advert login

கனடா தூதரக உயர் அதிகாரி நாட்டை விட்டு வெளியேற்றம் - இந்தியா அதிரடி நடவடிக்கை

கனடா தூதரக உயர் அதிகாரி நாட்டை விட்டு வெளியேற்றம் - இந்தியா அதிரடி நடவடிக்கை

20 புரட்டாசி 2023 புதன் 10:11 | பார்வைகள் : 3154


இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடா வெளியேற்றியதற்கு பதிலடியாக, கனடா தூதரக உயர் அதிகாரியை 5 நாட்களில் வெளியேற இந்தியா உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் சீக்கியர்களுக்கு 'காலிஸ்தான்' என்ற பெயரில் தனிநாடு அமைக்க சீக்கியர்களில் ஒரு பிரிவினர் குரல் கொடுத்து வருகிறார்கள். அவர்கள் கனடாவில் தங்கியிருந்து இந்தியாவுக்கு எதிரான காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே, கனடாவில், காலிஸ்தான் பிரிவினை அமைப்பின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் என்பவர் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கை கனடா போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்திய அதிகாரி வெளியேற்றம் 

இந்நிலையில், நேற்று கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒரு அறிவிப்பை வெளியிட்டார். 

''ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொலைக்கும், இந்திய அரசின் உளவாளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பகமான குற்றச்சாட்டு நிலவுகிறது'' என்று அவர் கூறினார்.

அவரது அறிவிப்பை தொடர்ந்து, கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரி, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக கனடா நாட்டு வெளியுறவு மந்திரி மெலானி ஜாலி அறிவித்தார். அந்த இந்திய அதிகாரி பெயர் பவன்குமார் ராய் என்றும், 'ரா' உளவுப்பிரிவின் உயர் அதிகாரி என்றும் தெரிய வந்தது.

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் 

கனடாவின் நடவடிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கனடாவின் குற்றச்சாட்டு, அபத்தமானது, அடிப்படை ஆதாரமற்றது என்று கூறியது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:- 

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு கனடா அரசியல் பிரமுகர்கள் பகிரங்கமாக ஆதரவு அளிக்கிறார்கள். 

இப்பிரச்சினையில் கனடா அரசின் மெத்தனம், இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது. இத்தகைய சட்டவிரோத காரியங்களுக்கு கனடா இடம் கொடுப்பது புதிதல்ல. கனடா மண்ணில் செயல்படும் இந்திய விரோத சக்திகள் மீது கனடா அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

சம்மன் 

மேலும், கனடாவின் செயலுக்கு பதிலடியாக, இந்தியாவுக்கான கனடா தூதரை மத்திய வெளியுறவு அமைச்சகம் 'சம்மன்' அனுப்பி வரவழைத்தது. 

அவரிடம், கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியேற்றும் முடிவை தெரிவித்தது. அப்போது, மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:- 

இந்தியாவின் உள்விவகாரங்களில் கனடா தூதரக அதிகாரிகளின் தலையீடு உள்ளது. இந்தியாவுக்கு எதிரான காரியங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 

இதுதொடர்பான இந்தியாவின் கவலைகளை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது. சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரி, இன்னும் 5 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

காங்கிரஸ் கருத்து 

இதற்கிடையே, கனடா தூதரக அதிகாரி வெளியேற்றம் குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:- 

பயங்கரவாதத்துக்கு எதிரான நமது போராட்டம், சமரசத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் நம்புகிறது. 

குறிப்பாக, நாட்டின் இறையாண்மைக்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாக இருக்கும்போது, சமரசம் கூடாது. 

நாட்டு நலன்கள் மற்றும் கவலைகளுக்கு எப்போதும் உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்