சப்பாத்தி ரோல்
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9753
மாலையில் குழந்தைகளுக்கு குட்டி டிபன் போன்று ஏதாவது செய்து தர நினைத்தால், சப்பாத்தி ரோல் செய்து கொடுங்கள். ஏனெனில் இது மிகவும் ஆரோக்கியமான ரெசிபி என்பதால், மாலையில் விளையாடிவிட்டு சோர்ந்து போய் பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களின் உடலில் எனர்ஜியானது அதிகரிக்கும். மேலும் இதை காலை உணவாகவும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். இங்கு சப்பாத்தி ரோல் எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை தவறாமல் முயற்சி செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி - 4
முட்டை - 2
உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள் (நறுக்கியது)
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அடுத்து மஞ்சள் தூள், மிளகாள் தூள், சாம்பார் பொடி, உப்பு மற்றும் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியை தூவி கிளறி இறக்கி விட வேண்டும்.
பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது தேய்த்து சூடேற்ற வேண்டும். பிறகு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒவ்வொரு சப்பாத்தியையும் தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் சூடேற்ற வேண்டும். அப்படி சூடேற்றும் போது, இரண்டு பக்கமும் அடித்து வைத்துள்ள முட்டையை சப்பாத்தியின் மீது ஊற்றி தேய்த்து, முன்னும் பின்னும் வேக வைத்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் அந்த சப்பாத்திகளில் உருளைக்கிழங்கு கலவையை வைத்து ரோல் செய்தால், சப்பாத்தி ரோல் ரெடி!!!