இலங்கையில் பரீட்சைக்கு சென்ற இரு மாணவிகளை காணவில்லை
15 வைகாசி 2024 புதன் 11:24 | பார்வைகள் : 1057
கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு பாடசாலை மாணவிகள் வீடு திரும்பவில்லை என கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவிகள் இருவரும் நேற்று காலை பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அம்பகமுவ தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் பரீட்சை நிலையத்திற்கு அருகில் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை ஒருசில மாணவிகள் பார்த்துள்ளனர்.
பின்னர் இரு மாணவிகளும் காணாமல் போய்யுள்ளனர். காணாமல் போன இரு மாணவிகளும் நண்பிகள் என தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன மாணவிகளின் தகவல்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.