இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர்
5 ஐப்பசி 2024 சனி 14:55 | பார்வைகள் : 1040
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில், இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்பதும், அருண் மாதேஸ்வரன் என்பவர் இந்த படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில், இந்த படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் எழுதுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் இந்த படத்தின் வசனத்தை எழுதுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடித்த ’பாபா’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமான எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், அதன்பிறகு ’சண்டக்கோழி’, ’பீமா’, ’மோதி விளையாடு’, ’அவன் இவன்’, ’இடம் பொருள் ஏவல்’, ’ஜெயில்’, ’எனிமி’, ’அயோத்தி’ உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கும் அவர் வசனம் எழுதியிருக்கும் நிலையில், இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இதுகுறித்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தனது இணைய பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது:
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் பணியாற்றுகிறேன்.அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மூன்று மாதங்களுக்கு முன்பாக அழைத்திருந்தார். திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து திரைக்கதை உருவாக்கப் பணியில் இணைந்து கொண்டேன்.
இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்திற்கு இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களுடன் சென்று அவரது சொந்த வீடு, அவர் படித்த பள்ளிக்கூடம், அவர் விளையாடி மகிழ்ந்த இரட்டை ஆலமரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்டோம். அத்துடன் ஊர்மக்களை சந்தித்து உரையாடினோம்.
இளையராஜாவின் பழைய நேர்காணல்கள், பத்திரிக்கைச் செய்திகள் அவரது பழைய புகைப்படங்கள், காணொளிகள் எனச் சேகரித்துக் கொண்டேன். அவர் குறித்து வெளியான தகவல்கள் மற்றும் தொடர் கட்டுரைகளைத் தேடித்தேடி வாசித்தேன். அவர் கடந்து வந்த பாதை வலியும் வேதனையும் நிரம்பியது. தமிழ் திரையிசையில் அவரது சாதனைகள் நிகரற்றவை. இசையின் மானுட வடிவமே இளையராஜா.
அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான அனுபவம். இப்படம் அவரது திரைவாழ்வில் மிக முக்கியப் படமாக அமையும்.
இரண்டு மாத கால தொடர் விவாதங்களுக்குப் பிறகு திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசன வடிவை எழுதி இயக்குநருக்குக் கொடுத்துள்ளேன். அவரது திருத்தம் மற்றும் மாற்றங்களுக்கு பின்பு திரைக்கதையின் இறுதி வடிவம் உருவாகும்.
இளையராஜாவின் இசை கேட்டு வளர்ந்த எனக்கு அவரது படத்தில் பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது பெருமகிழ்ச்சியை தருகிறது.