குழந்தைகளுக்கான புது அம்சத்தை அறிவித்த ஆப்பிள்
1 ஆவணி 2024 வியாழன் 09:56 | பார்வைகள் : 774
இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் ஃபார் யுவர் கிட்ஸ் (For Your Kids) அம்சத்தை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்பிள் வாட்ச் ஃபார் யுவர் கிட்ஸால் உங்கள் குழந்தைகளுடன் தொடர்பில் இருக்கவும், அவர்கள் எங்கிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும் முடியும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களின் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சியை கண்காணிக்கவும், மேலும் ஆப்பிள் வாட்ச்சின் மற்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்த அனுமதிக்கும்.
இதன் மூலம் உங்கள் குழந்தைகள், தகவல்கள் மற்றும் போன் அழைப்புகள் மற்றும் நீங்கள் வழக்கமாக ஆப்பிள் வாட்சில் பெறும் அனைத்து உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி அம்சங்களையும் பெறலாம்.
இந்த அம்சம் இப்போது இந்தியாவில் வழங்கப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் SE மற்றும் ஆப்பிள் வாட்ச் 4 அல்லது அதற்குப் பிறகு வெளியான மாடல்களில் இந்த அம்சம் வேலை செய்யும். வாட்ச் ஓஎஸ் 7 அல்லது அதற்குப் பிறகு வந்த இயங்குதளங்கள் மற்றும் ஐஓஎஸ் 14 அல்லது அதற்குப் பிறகு வெளியான ஓஎஸ் கொண்ட ஐபோன் மாடல்களில் இந்த அம்சம் இயங்கும்.
தற்போது, ஆப்பிள் இந்த அம்சத்திற்காக ஜியோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதாவது, இந்த அம்சம் செயல்பட, நீங்கள் ஆப்பிள் வாட்சுக்கான புதிய ஜியோ இணைப்பைப் பெற வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கான ஆப்பிள் வாட்ச் அமைக்க, குறைந்தபட்சம் பெற்றோரில் ஒருவராவது ஐபோன் பயனராக இருக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆப்பிள் வாட்ச் குழந்தைகளுக்கு அவர்களின் சுதந்திரத்தை கொடுக்கும். அதே நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்கவும் அனுமதிக்கும்.
ஆப்பிள் வாட்சிலிருந்து குழந்தைகள் எந்த தொடர்பை இணைக்கிறார்களோ அதனை பெற்றோர்கள் கண்காணிக்க முடியும். அதே போல் தங்கள் குழந்தைகளின் இருப்பிடத்தை ஐபோனில் இருந்து கண்காணிக்க முடியும்.