இந்தியன் 2 எப்படி இருக்கிறது?
12 ஆடி 2024 வெள்ளி 10:38 | பார்வைகள் : 754
1996ம் ஆண்டு வெளிவந்த 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமாக இந்த 'இந்தியன் 2' படம் வெளிவந்துள்ளது.முதல் பாகத்தில் தமிழகத்தை மையமாகக் கொண்ட களம், அதில் நடந்த சில ஊழல்கள், சில ஊழல்வாதிகளை இந்தியன் தாத்தா உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி அவர்களுக்குத் தண்டனை கொடுத்தது கதையாக இருந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் மற்ற மாநிலங்கள் பக்கமும் சென்று ஊழல்வாதிகளைத் தண்டிக்கிறார் தாத்தா.
ஷங்கரின் வழக்கமான பிரம்மாண்டம், இந்தக் காலத்திற்கேற்றபடி யு-டியூப், சமூக வலைத்தளங்கள் என திரைக்கதையைப் பயணிக்க வைத்துள்ளார். இத்தனை ஆண்டு காலமாகியும் ஊழல் ஒழியாத காரணத்தால் அந்த ஊழல்வாதிகளைத் தேடி 'கம் பேக் இந்தியன்' ஆக வருகிறார் தாத்தா. ஊழல்வாதிகளை கதற விடப் போறாரா இல்லையா என்பதுதான் கதை.
சித்தார்த் அவர்களது நண்பர்கள் 'பார்க்கிங் டாக்ஸ்' என்ற யு டியூப் சேனலை நடத்தி வருகிறார்கள். ஊரில் நடக்கும் அவலங்களைச் சொல்வதுதான் அவர்களது சேனல். என்ன நடந்தாலும் இந்த ஊரைத் திருத்த முடியவில்லையே என ஆதங்கப்படுகிறார்கள். இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால்தான் இதை மாற்ற முடியும் என நினைக்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் 'கம் பேக் இந்தியன்' என ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்கிறார்கள். நாட்டைத் திருத்துவதற்கு முன் உங்கள் வீட்டையும் திருத்துங்கள் என பேஸ்புக் லைவ்வில் வந்து சொல்கிறார். வெளிநாட்டில் இருக்கும் தாத்தா அவற்றைப் பார்த்து மீண்டும் இந்தியா வருகிறார். ஒரு 'தங்க' கோடீஸ்வரனையும், உயர் அதிகாரி ஒருவரையும் 'வர்மம்' மூலம் கொலை செய்கிறார். இந்தியன் தாத்தா சொன்னது போல தங்கள் வீட்டையும் திருத்த சித்தார்த் அன்ட் கோ முயல்கிறது. அதனால் ஒரு பேரிழப்பு நிகழ்கிறது. கோபமடையும் சித்தார்த் அன்ட் கோ இந்தியன் தாத்தாவை 'கோ பேக்' சொல்கிறது. தாத்தாவைத் தேடும் சிபிஐ அதிகாரி பாபி சிம்ஹாவும் அவரை சுற்றி வளைக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
20 வயது இளைஞர் என்ன செய்வாரோ அதை அனைத்தையும் செய்கிறார் 100 வயதைக் கடந்த இந்தியன் தாத்தா. முதல் பாகத்தில் தாத்தாவை ஹீரோயிசத்துடன் காட்டியிருந்தார்கள். இந்தப் படத்தில் அந்த ஹீரோயிசம் கொஞ்சம் மிஸ் ஆகியுள்ளது. அதை விட தாத்தாவை அதிகம் பேச வைத்திருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசியது போல படத்திலும் அதிகம் பேசுகிறார் தாத்தா கமல்ஹாசன். இந்தக் காலத்து இளைஞர்களுக்குப் பிடிக்காதது அட்வைஸ்தான் என்பதை அவரும், இயக்குனரும் மறந்துவிட்டார்கள். ஆனாலும், இப்படத்தின் முடிவில் 'இந்தியன் 3'க்கான முன்னோட்டக் காட்சிகள், அந்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.
யு டியுப் சேனல் நடத்துபவராக சித்தார்த். சமுதாயத்தின் மீது அதிக அக்கறை கொண்ட ஒரு கதாபாத்திரம். குப்பையை வீதியில் போடுவதிலிருந்து ஊழல் செய்வது அப்பாவாகவே இருந்தாலும் எதிர்த்து நிற்கும் ஒரு கதாபாத்திரம். அதனால் ஒரு பேரிழப்பை சந்திக்கிறார். அவரைப் போலவே அவரது தோழி பிரியா பவானி சங்கர், நண்பர் ஜெகன் ஆகியோரும் தங்கள் வீட்டை சுத்தப்படுத்தப் போய் தனித்தும், தவித்தும் நிற்கிறார்கள். சித்தார்த் காதலியாக சில காட்சிகளில் வந்து போகிறார் ரகுல் ப்ரீத் சிங்.
சிபிஐ அதிகாரிகளாக பாபி சிம்ஹா, விவேக், 'அந்நியன்' பட பிரகாஷ்ராஜ், விவேக் கூட்டணியை ஞாபகப்படுத்துகிறார்கள். காளிதாஸ் ஜெயராம், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, குல்ஷன் குரோவர், ரேணுகா என நிறைய பேர் வந்து போகிறார்கள். எஸ்ஜே சூர்யாவுக்கு மூன்றாம் பாகத்தில் அதிக நேரம் இருக்கலாமோ ?.
ரவிவர்மன் ஒளிப்பதிவு, விஎப்எக்ஸ் காட்சிகள் படத்திற்கு மிகப் பெரும் ஆதரவாக உள்ளன. ஆரம்பத்தில் அடுத்தடுத்து வரும் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. அனிருத் இசைத்திருந்தாலும் முதல் பாகத்தில் ஏஆர் ரகுமான் இசையை நினைக்க வைக்கிறது. மூன்று மணி நேரப் படத்தை இன்னும் சுருக்கியிருக்கலாம்.
முழுமையாக ஒரு கமர்ஷியல் படமாக சோஷியல் மெசேஜ் சொல்லக் கூடிய படமாக இருந்தாலும் ஷங்கரின் முழு 'டச்' குறைவாகவே உள்ளது. அவரது படங்களில் வழக்கமாக இருக்கும் 'க்ளிஷே'வான காட்சிகள் இதிலும் இருப்பது தாக்கத்தைக் குறைக்கிறது.