மத்திய பட்ஜெட்டால் கல்வித்தரம் உயரும்: ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பேட்டி
3 மாசி 2025 திங்கள் 03:39 | பார்வைகள் : 387
மத்திய அரசின் புதிய பட்ஜெட்டால், நாட்டின் கல்வித்தரம் உயரும்' என, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: மத்திய பட்ஜெட்டில், கல்வியின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கான பல அம்சங்கள் உள்ளன. நம் நாட்டில், 2047க்குள் நிறைய தொழில் முனைவோரை உருவாக்க வேண்டிய நிலையில், நிறைய கல்வி நிலையங்களில், 50,000 உயர் தொழில் நுட்ப சோதனை கூடங்கள் உருவாக்குவதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்பட்டு உள்ளது.
கிராமப்புற பள்ளிகளில் பிராட் பேண்ட் உடன் கூடிய இணையதள வசதிகளை வழங்க முன் வந்துள்ளதால், வித்யாசக்தி திட்டத்தை முழு மூச்சில் செயல்படுத்த உதவும். இதன் வாயிலாக, மிகச்சிறந்த கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர், கிராமப்புற மாணவர்களுடன் உரையாட முடியும். இதனால், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும், உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையை உயர்த்தவும் முடியும்.
'புஸ்தக் யோஜனா' என்ற திட்டத்தின் வாயிலாக, மிகச்சிறந்த தொழில்நுட்பங்கள், அறிவியல் முன்னேற்றங்கள் குறித்த முக்கிய புத்தகங்களை, தாய்மொழியில் மொழி பெயர்க்க முடியும். இது, அனைத்து மாநில மாணவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். எங்கள் ஐ.ஐ.டி.,யிலேயே, புகழ்பெற்ற ஆசிரியர் எழுதிய இயற்பியல் புத்தகத்தை, இங்குள்ள பேராசிரியர் தெலுங்கு மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.
உயர்கல்வி துறை வாயிலாக, மேலும் மூன்றாம் தலைமுறை என்ற, '3ஜி' ஐ.ஐ.டி.,க்களை உருவாக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் வாழ்வில், ஐ.ஐ.டி.,க்களில் படிப்புக்காக ஐந்தாண்டுகளை அர்ப்பணிக்கும் நிலையில், அவர்களின் தரமான ஆராய்ச்சி பணிகள், ஆராய்ச்சி கட்டுரைகள், கண்டுபிடிப்புகளுக்கு உதவும். அடுத்த ஐந்தாண்டுகளில் இதன் விளைவை பார்க்க முடியும்.
'பி.எம்.ஆர்.எப் 2.0' என்ற திட்டம் மிகச்சிறந்த திட்டம். ஆராய்ச்சிகளுக்கு உதவும் வகையில், ஏ.என்.ஆர்., எனும் நிதியளிப்பு திட்டமும், நாடு முழுதும் இளம் விஞ்ஞானிகளை உருவாக்க உதவும். இதுபோன்ற பல நல்ல தகவல்கள் உள்ளதால், ஐ.ஐ.டி., இயக்குனராக, பேராசிரியராக மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு காமகோடி கூறினார்.