கர்ப்பிணிகளே மனதை கூலா வைச்சிகோங்க
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10233
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அதிகப்படியாக உணர்ச்சிவசப்படாமலும் இருக்க வேண்டும். ஏனெனில் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட்டாலோ அல்லது மன அழுத்தத்தில் இருந்தாலோ, அது வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
அதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில், இத்தகைய மன அழுத்தத்துடன் உணர்ச்சிவசப் பட்டால், அது கருசிதைவிற்கு கூட வழிவகுக்கும். பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது சந்தோஷமான உணர்வு அதிக அளவில் இருந்தாலும், ஒருவித பதற்றமும் இருக்கும். அதிலும் ஒரு நாளைக்கு பலவிதமான மனநிலை மாற்றங்களை கர்ப்பிணிகள் சந்திப்பார்கள்.
கர்ப்ப காலத்தை சந்தோஷமாக அனுபவிக்க ஒருசில முறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றி வந்தால், நல்ல ஆரோக்கியமான முறையில் குழந்தையைப் பெற்றெடுக்கலாம். கர்ப்பமாக இருக்கும் போது அமைதியாக இருக்க வேண்டும். அப்படி அமைதியாக இருக்கும் போது, நேர்மறையான எண்ணங்களை நினைக்கலாம்.
இதனால் வயிற்றில் வளரும் குழந்தையும் எப்போது நேர்மறை எண்ணங்களோடு பிறக்கும். கணவருடன் மனதில் தோன்றுவதை பகிர்ந்து கொண்டால், மனம் சாந்தமடைந்து, கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக இருக்கலாம். கர்ப்பமாக இருக்கும் போது எதையும் மனதில் வைத்துக் கொண்டு இருக்காமல், வெளிப்படையாக பேசினால், எந்த ஒரு கஷ்டமும் மனதை அழுத்தாமல் இருக்கும்.
ஒரு விஷயத்திற்காக அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படும் போது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதற்கு அப்போது மனதில் வேறு ஏதாவது சந்தோஷமான தருணங்களை நினைத்துக் கொள்ள வேண்டும். வயிறு சற்று பெரியதாகிவிட்டால், குழந்தை அசைய ஆரம்பிக்கும். அப்போது பெண்கள் அதிகமாக சந்தோஷப்படுவார்கள்.
அந்த சந்தோஷத்துடன், குழந்தையிடம் எதையாவது பேச ஆரம்பித்தால், வயிற்றில் வளரும் குழந்தையானது அசைவின் மூலம் பேச ஆரம்பிக்கும். இதனால் மனதில் உள்ள கஷ்டம் குறையும். கர்ப்பமாக இருக்கும் போது நிறைய தோன்றும். அப்படி மனதில் எழும் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம், மனம் சாந்தமடைவதோடு, உணர்ச்சிகளும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
நல்ல ஆரோக்கியமாக உணவுப் பொருட்களை உண்டால், வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதோடு, மன கஷ்டமும் நீங்கும். இவ்வுலகில் கவலைகள் அனைவருக்குமே இருக்கும். இத்தகைய கவலைகளானது ஒருவரை மன அழுத்தத்தில் தள்ளுவதற்கு காரணம், அதனைப் பற்றி வெளிப்படையாக பேசாமல் இருப்பதே ஆகும்.
எனவே கர்ப்பிணிகளே மனதில் கவலை எழுந்தால், அதனை வெளிப்படையாக பேசுங்கள். வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டு போகும் என்று சொல்வார்கள். ஆகவே கர்ப்பமாக இருக்கும் போது எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள். எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருந்தால், சந்தோஷம் தானாக வரும்.
கர்ப்பிணிகள், ஏதேனும் ஒரு விளையாட்டு அல்லது வேலையில் ஈடுபட்டால், மனதில் எந்த ஒரு கஷ்டமும் இருக்காது. நண்பர்கள் இருந்தாலே, கஷ்டம் அண்டாது என்று சொல்வார்கள்.
எனவே கர்ப்பமாக இருக்கும் போது, மனதை சந்தோஷமாக வைத்திருக்க நண்பர்களை சந்தித்தால், மன அழுத்தம் மற்றும் கஷ்டத்தில் இருந்து விடுபடலாம். ஒருவேளை உங்களுக்கு பெயிண்ட்டிங் அல்லது புத்தகம் படிப்பது பிடித்தால், அதனை செய்யுங்கள், இதனால் மனதை ரிலாக்ஸாக வைத்திருக்கலாம்.