சாம்பார் வடை
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10135
பொதுவாக வடை என்றால் அனைவருக்குமே பிடிக்கும். அதிலும் உளுத்தம் பருப்பு வடை என்றால், மிகவும் பிடிக்கும். இத்தகைய உளுத்தம் பருப்பு வடை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. சிலர் இந்த வடையை சாம்பாரில் போட்டும் சாப்பிடுவார்கள் மற்றும் சிலரோ சட்னியுடன் சாப்பிடுவார்கள். அத்தகைய சாம்பார் வடை எனப்படும் உளுத்தம் பருப்பு வடையை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 2 கப்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
மிளகு - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 கப்
செய்முறை:
முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 3-4 மணிநேரம் ஊற வைத்து, நன்கு மென்மையாக அதிகப்படியான நீரை சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுத்தம் பருப்பு மாவை போட்டு உப்பு சேர்த்து நன்கு கிளறி, மிளகு, வெங்காயம், மிளகாய் தூள், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கையை நீரில் நனைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை வடைகளாக தட்டி, நடுவே விரலால் ஓட்டை போட்டு, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது அருமையான சாம்பார் வடை ரெடி!!! இதனை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.