Paristamil Navigation Paristamil advert login

அரசியலில் சூப்பர் ஸ்டார் பிரதமர் மோடிதான்- சீமானுக்கு வானதி சீனிவாசன் பதில்

அரசியலில் சூப்பர் ஸ்டார் பிரதமர் மோடிதான்- சீமானுக்கு வானதி சீனிவாசன் பதில்

29 கார்த்திகை 2024 வெள்ளி 05:50 | பார்வைகள் : 620


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் மறைந்த பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் சார்பில், நடைபெற்ற மாவீரர் நாள் வீர வணக்க பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், "எனக்கு காவி உடை அணிவித்து, சங்கி ஆக்க பார்க்கிறார்கள். 

எந்த உடை அணிந்தாலும் எனக்கு சரியாக இருக்கும். ஆனால், காவி உடை எனக்கு பொருந்தமாக இருக்காது. எனக்கு அது பிடிக்காது. நானும், நடிகர் ரஜினிகாந்தும் பேசியது எங்கள் இருவருக்கு மட்டும்தான் தெரியும். அதை வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை. அவருக்கும் இல்லை. அவருடன் பேசியதால் என்னை சங்கி ஆக்கினால், அவரை வைத்து ஆண்டுக்கு 2 படம் எடுத்து சம்பாதிக்கும் நீங்கள் யார்? உங்களுக்கு பெயர் என்ன?

புத்தக வெளியீடு என்றாலும், குடும்ப நிகழ்ச்சிகள் என்றாலும் அவரை அழைக்கிறீர்கள். ஒரு முறைதான் நான் அவரை சந்தித்துள்ளேன். அதற்கு, 'ஐய்யோ, ஐய்யோ' என்று அடித்துக் கொள்கிறார்கள். ஏனென்றால், அவர் திரையுலக 'சூப்பர் ஸ்டார், நான் அரசியல் சூப்பர் ஸ்டார்'. இரண்டு சூப்பர் ஸ்டார்களை பார்த்ததும் பலர் பயந்துவிட்டார்கள்" என்று பேசினார். இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-

காவி என்பது பா.ஜ.க.வுக்கு சொந்தமான நிறம் கிடையாது. காவி என்பது இந்த நாட்டின் பாரம்பரியம். காவி என்பது இந்த நாட்டிலே தியாகத்தை குறிக்கக்கூடிய நிறம். சனாதன தர்மத்தோடு மிக உயர்ந்த நிலையில் வைத்துப் பார்க்கக்கூடிய நிறம். அதை சீமான் தவறாக புரிந்து கொண்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் மற்றவர்கள் கொடுக்க வேண்டும். அவரவர் கொடுத்துக் கொள்ளக்கூடாது.  அரசியலில் சூப்பர் ஸ்டார் என்றால், மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடிதான். பிரதமர் மோடி உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு புதிய கவுரவத்தை, புதிய மரியாதையை தேடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உலக நாடுகள் எல்லாம் மிகச்சிறந்த தலைவர் என பட்டமளித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்